VCK wall ad Destruction: Person arrested on suspicion, public roadblock demanding the release

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள பள்ளக்காலிங்கராயநல்லூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று பாலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி சுவர் விளம்பரம் எழுதப்பட்டு இருந்தது.

இதை இரவு வேளையில் மர்மநபர்கள் யாரோ அழித்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலை அதே ஊரைச்சேர்ந்த பாண்டுரெங்கன் (60) என்ற விவசாயி திருமாவளவனின் பிறந்த ஊரான அங்கனூரில் உள்ள அவரது நிலத்திற்கு சென்று இருந்தார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் திருமாவளவனின் தம்பி செங்குட்டுவன் என்பவர் அவ்வழியாக வந்தார். செங்குட்டுவன், பாண்டுரெங்கன் தரப்பினர்தான் திருமாவளவனின் சுவர் விளம்பரத்தை அழித்திருப்பார்கள் என சந்தேகப்பட்டு பாண்டுரெங்கனிடம் இதுகுறித்து கேட்டார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த விவசாயிகள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செங்குட்டுவன் இந்த சம்பவம் குறித்து தளவாய் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் பாண்டுரெங்கன் அவரை கன்னா, பின்னாவென திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் தளவாய் போலிசார் வழக்கு பதிவு செய்து பாண்டுரெங்கனை கைது செய்தனர். இதில் ஆத்திரமடைந்த ப.கா.நல்லூர் கிராம மக்கள் பாண்டுரெங்கன் மீது எந்த தவறும் இல்லை அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி செந்துறை – அகரம்சீகூர் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

தகவலின் பேரில் குன்னம் காவல் ஆய்வாளர் சிவசுப்ரமணியம், மங்களமேடு காவல் ஆய்வாளர் ஞானசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!