Tough legislation is needed to prevent a one Side love murders! PMK Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள மற்றொரு அறிக்கை :

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; கடுமையாக தண்டிக்கத்தக்கது.

கீழ் பவளங்குடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கருவேப்பிலங் குறிச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று கல்லூரியில் இருந்து திரும்பிய அவர், வீட்டில் தனியாக இருந்த போது அருகிலுள்ள பேரலையூர் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவன் வீட்டிற்குள் புகுந்து திலகவதியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டான். உயிருக்கு போராடிய திலகவதியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. திலகவதியை இழந்த அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

திலகவதி எந்தப் பாவமும் செய்யவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் படித்தால் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் தம்மை காதலித்தே தீர வேண்டும் என்று திலகவதியை கட்டாயப்படுத்தி இருக்கிறான். அதற்கு திலகவதி மறுத்து விட்டதால், அவரை வெறித்தனமாக கொலை செய்திருக்கிறான்.

காதலிக்க மறுக்கும் பெண்களை கொடூரமான முறையில் குத்தியும், வெட்டியும் கொலை செய்வது இது முதல்முறையல்ல. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் 2016&ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தையடுத்த வ.பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்து கொலை செய்தது. தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட்டையால் அடித்தும், தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட்டியும் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகையக் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.

ஒரு தலைக் காதல் கொலைகளில் பெரும்பாலானவை அவற்றையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் ஒரு கும்பலால் நடத்தப்பட்டவை தான். பிற சமுதாயத்து பெண்கள் அனைவரும் தங்களால் காதலிக்கப் படுவதற்காகவே பிறந்தவர்கள் என நினைக்கும் அவர்கள், தங்களின் நாடகக் காதலை நம்பி ஏமாறும் பெண்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர்; காதலிக்க மறுக்கும் பெண்களை படுகொலை செய்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றுவது சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய கொலைகள் தொடரக்கூடாது என்பதற்காகவும், இளம்பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அனைத்து சமுதாயப் பேரியக்கத்தைத் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் இத்தகைய கொலைகள் தொடருகின்றன. இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள், இத்தகைய செயல்களை ஆதரிப்பதும், தூண்டி விடுவதும் தான் இத்தகைய கொலைகளுக்கு மூல காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இதில் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். இன்னும் சிலரோ, இத்தகைய கொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், வேறு சிலரோ இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறி மிகவும் எளிதாக கடந்து செல்கின்றனர். இத்தகையப் போக்கு மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் பெண்கள் படித்தால் தான் சமூகம் முன்னேறும். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் காரணமாக தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்கும் நிலை உருவாகியுள்ளது. பெண்களை படிக்க வைக்க முடியாமலும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாமலும் தடுக்கும் வகையில் நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!