The teenager’s death at the CPM party seeking to change case to CBCID

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த தங்கவேலு மல்லிகா, இவர்களின் 3வது மகள் ஐஸ்வர்யா (வயது 22) கடந்த 16.3.2017 அன்று குரும்பலூர் முத்துசாமி என்பவரது கிணற்றில் சடலமாக மிதந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களும் சி.பி.எம் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், நடைபெற்ற விசாரணையில் நாவலூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பார்த்தீபன் என்பவரும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்ததும் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் இருதரப்பிலும், பேச்சு வார்த்தை நடத்தி பிரித்து வைக்கப்பட்டனர் என்றும் காவல் துறை சார்பில் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பார்த்தீபனின் நண்பர் சரண்ராஜ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல் துறை அலட்சியமாக செயல்படுவதாகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உண்மை கண்டறியும் குழு முன்னாள் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான ஆர்.கிருஷ்ணன் தலைமையில், மாநில தணைத் தலைவர் எம்.சின்னதுரை மற்றும் வழக்கறிஞர்கள் வி.ரங்கராஜன், ஆ.இளையராஜா ஆகியோர் சார்பில் சம்பவ இடங்களுக்கு சென்றதோடு இரு தரப்பினரிடம் சென்று விசாரணை செய்து மரணத்தில் உள்ள முகாந்திரம் குறித்து அறிக்கையினை பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டனர். அதில் காவல் துறையினர் தற்கொலை வழக்கு தான் என காவல் துறையினர் கூறி வருவது வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 ன் படி குற்றமாகும்.

ஐஸ்வர்யா காதலன் பார்த்தீபன் வீட்டிற்கு சென்ற பிறகு தான் காணாமல் போயுள்ளார். அவர் மிதந்த கிணற்றின் அருகே வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் இருந்தது ஆனால் செல்போன் மட்டும் கிடைக்கவில்லை. ஐஸ்வர்யா பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் என்று இந்த குழு உறுதியாக நம்புகிறது. எனவே பெரம்பலூர் காவல் துறை விசாரணை நடத்தி நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சிபிசிஐடி இவ்வழக்கை ஏற்று விசாரணை செய்ய வேண்டும் படுகொலை செய்யப்பட்ட ஐஸ்வர்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தீருதவி தொகை முழுவதையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அறிக்கையில் உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை விசிக ஸ்டாலின் குணசேகரன் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் ப.காமராசு சிபிஎம் வட்ட செயலாளர் ராஜாங்கம் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!