The impact of the maximum summer hot in Namakkal district: The people do not go out: the Collector

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெய்யிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவ ட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கோடை வெய்யிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதன்படி, பொதுமக்கள் பகல் வேளையில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை இந்த நேரங்களில் வெளியிடங்களில் விளையாட அனுமதிக்க வேண்டாம். பயணம் செல்லும் போது போதுமான குடிநீரை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

கதவு மூடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களில் (கார்) குழந்தைகளையும், கால்நடைகளையும் சிறிது நேரம் கூட விட்டுச் செல்லக் கூடாது. மயக்கமான நிலை அல்லது களைப்பு ஏற்ப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள டாக்டரை அணுக வேண்டும.

கோடை காலத்தில் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் வீடுகளில் தயாரிக்கும் லஸ்ஸி, அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மோர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் போன்றவற்றை அதிகம் அருந்த வேண்டும். தர்பூசணி, நுங்கு, இளநீர் மற்றும் பழச்சாறுகளையும் அருந்தலாம்.

கால்நடைகளை நிழல் உள்ள இடத்தில் நிறுத்தவேண்டும். அவைகளுக்கு குடிப்பதற்கு அதிகளவு தண்ணீரும் கொடுக்க வேண்டும். 100 நாள் திட்டப் பணியில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அளவுக்கு குடிநீரை வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், தொழிலாளர்கள் தங்களுடன் குழந்தைகளை அழைத்து வந்தால் அவர்களை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் நிழலில் தங்க வைக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை மதியம் கடும் வெயிலின்போது, பொது வெளியில் பணியமர்த்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தினமும் வானிலை ஆராய்ச்சி மையத்தினரால் வெயில் தாக்கம் குறித்து முன்கூட்டியே கணித்து அளிக்கப்படும் எச்சரிக்கை விவரத்தை டிவி, ரேடியோ, செய்தித்தாள்கள் வழியாக அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

வெய்யிலினால் பாதிக்கப்பட்ட நபரை குளிர்ச்சியான, நிழல் உள்ள இடத்தில் படுக்க வைக்க வேண்டும். மேலும் குளிர்ந்த தண்ணீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுவதும் துடைத்து, ஈரப்படுத்த வேண்டும். தலையின் மீது சாதாரண தண்ணீரை ஊற்றவேண்டும். உடல் வெப்பநிலையானது, இயல்பு நிலைக்கு வரும் வரை இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபருக்கு ஓஆர்எஸ், எலுமிச்சை பழச்சாறு உள்ளிட்ட பானங்களை குடிப்பதற்கு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மலைப் பிரதேசங்களில் இருந்து உறவினர்கள் வீடுகளுக்கு வருபவர்கள், ஒரு வார காலத்துக்கு வந்துள்ள பகுதியில் உள்ள வெப்பநிலையை உடல் ஏற்றுக் கொள்ளும் வரை, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!