The government visitor requested to add 18-year-olds to the voter list

நாமக்கல் : வருகிற 31ம் தேதி வரை நடைபெறும் சுருக்க முறை திருத்த முகாமில் 18 வயது நிறைவடைந்து அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அரசியல் கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பார்வையாளர் கேட்டுக்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 1.1.2019 – தகுதி நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் செப்.1ம் தேதி துவங்கி அக்.31ம் தேதி வவைர நடைபெறுகிறது.

இந்த பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம் எனவும், மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம், திருத்தம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை கடந்த 14ம் தேதி உட்பட 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செல்லப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுச்சத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி முகாம்களை வாக்காளர் பட்டியல் அரசு பார்வையாளர் மற்றும் எல்காட் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் நோரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் எல்காட் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் வரும் 31ம் தேதிவரை நடைபெறவுள்ளதால் 18 வயதுடைய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ பழனிச்சாமி, சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதி, திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லிராஜ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!