The fascist dictatorship of the Modi government is the skilful power of the investigating agencies: Vaiko condemns

மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கை:

அடால்ப் ஹிட்லரின் பாசிசப் பாதையில் மோடி அரசு பயணிக்கிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, தனிநபர் அலைபேசி தகவல்கள் உள்ளிட்ட நாட்டின் எந்தக் கணினியையும் கண்காணிக்கலாம் என்று பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ஆகும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள ஆணையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 (i)ன் படி, விசாரணை மற்றும் உளவு அமைப்புகள் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்தலாம். அவற்றில் சேமிக்கப்பட்டு இருக்கும் தகவல்களைப் பெறலாம். ஆய்வு செய்யவும், இடைமறித்துப் பார்க்கவும், சோதனையிடவும் அதிகாரம் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

உளவுத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குனரகம், சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, ‘ரா’ உளவு அமைப்பு, சமிக்ஞை புலனாய்வு இயக்குனரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகிய பத்து அமைப்புகளுக்கு நாட்டின் கணினிகளைக் கண்காணிக்கும் அதிகாரத்தை பா.ஜ.க. அரசு வழங்கி இருக்கிறது.

இந்த விசாரணை அமைப்புகள் கோரும் தகவல்களை தர மறுப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் மோடி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைத்து வரும் மக்கள் விரோத மோடி அரசு, நாட்டைப் பாதுகாக்க விசாரணை அமைப்புகளுக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கி இருப்பதாகக் கூறுவது அக்கிரமத்தின் உச்சகட்டமாகும். அரசியல் சட்டம் அனுமதித்து இருக்கும் குடிமக்களுக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஜெர்மனியில் ஜனநாயக வழியில் பதவிக்கு வந்தபின்னர்தான் ஹிட்லர் பாசிச கொடுங்கோலராக மாறினார். ஹிட்லரையும், முசோலினியையும் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட இந்துத்துவா, சங் பரிவார் கூட்டம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்றது.

வரலாற்றின் குப்பைத் தொட்டில் வீசி எறியப்பட்ட உலக சர்வாதிகாரிகளின் கதிதான் ஜனநாயகத்தை வேரறுக்க நினைக்கும் பா.ஜ.க. பாசிச அரசுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன். மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அரசியல் சாசன மரபுகளை ஆழக் குழிதோண்டிப் புதைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சவக்குழியில் தள்ளி இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அற்குள் தாங்கள் விரும்பியவாறு ஒற்றை ஆதிக்க ஆட்சியை நிலைநிறுத்த முனையும் பா.ஜ.க. சனாதனக் கூட்டத்தின் முயற்சியை முறியடிக்க அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!