The farmers have been requested to set up the Agricultural College in Namakkal

நாமக்கல்லில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரிசு நில மேம்பாட்டு விவசாயிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தரிசு நில மேம்பாட்டு விவசாயிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில், கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரியகுளம் ஆகிய இடங்களில் வேளாண் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனால் கல்வி மாவட்டமாக விளங்கும் நாமக்கல்லில் அரசு வேளாண் கல்லூரி இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி, வெங்காயம் ஆகியவை அதிகம் விளைகின்றன.

மேலும் நெல், வாழை, வெற்றிலை உற்பத்தியுடன், கடலை, பாசிப்பயறு, துவரை, தட்டப்பயறு உள்ளிட்ட பயிர்களும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் மக்காச் சோளமும் விளைவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வேளாண் கல்லூரி இம்மாவட்டத்தில் அமைந்தால் மண் பரிசோதனை அடிப்படையில், மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர் செய்யலாம்.

பயிர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து காக்கவும், புதிய ரகங்களை உற்பத்தி செய்யவும், படித்த வேலை இல்லாத இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், சுயதொழில் பயிற்சி, கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற பல்வேறு பயிற்கள் பெறும் களமாகவும் அமையும்.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய தொழிலான கோழிப் பண்ணை தொழிலுக்கும், உதவிகரமாக இருக்கும். இங்கு கோழியின நோய் கண்டறியும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டால் கோழிப் பண்ணை தொழிலுக்கு புதிய மைல்கல்லாக அமையும்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், கோழிப் பண்ணையாளர்கள், படித்த இளைஞர்கள், மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோரின் வாழ்வு வளம்பெற நாமக்கல்லில் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!