Teachers and officers should be required Return to work for the benefit of the students; KDMK Eswaran request

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்குத்திரும்ப வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் இரண்டாவது உலக கொங்கு தமிழர் மாநாடு பிப்.3ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதையொட்டி கொங்கு தீரன்படை ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு திடலில் நடைபெற்றது. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தேவராஜன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாநாடு சம்மந்தமான பாடல்கள் அடங்கிய ஆடியோ சிடியை வெளியிட்டு பேசியதாவது:

கொமதேக சார்பில் வருகிற பிப்.3ம் தேதி நாமக்கல்லில் இரண்டாவது உலக கொங்கு தமிழர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் கொங்கு வேளாளர் சமூகத்தினர் வந்து கலந்துகொள்ள உள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டுக்கு வருபவர்களுக்கும், போக்குவரத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு இல்லாமல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கொங்கு இளைஞர் தீரன்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அதனால் பாதிக்கப்படுவது அரசியல்வாதிகள் அல்ல.அப்பாவி பொதுமக்களும், தேர்வு நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகளும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.

மத்திய அரசு முற்பட்ட வகுப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இதை முறையாக நடைமுறைப்படுத்துவது கடினம், போலியாக வருமான சான்றிதழ்களைப் பெற்று பலர் இச்சலுகையை அனுபவிக்கக் கூடும். மேலும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் பொருளாதார ரீதியில்பின்தங்கியவர்ள் உள்ளனர். எனவே இப்பிரச்சினையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து பிரிவிலும் ஒரு குடும்பத்தில் இரண்டு தலைமுறை இட ஒதுக்கீட்டை அனுபவித்தவர்கள் அடுத்து மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும்.

கர்நாடகா அரசு மோகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டம் தயாரிக்கலாம், சட்டசபையில் அறிவிக்கலாம், நிதி ஒதுக்கீடு செய்யலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம். தமிழக அரசின் அனுமதியில்லாமல் தமிழகத்தில் பாய்கிற காவிரி தண்ணீரை தடுத்து கர்நாடகா அனை கட்ட முடியாது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக அரசு சட்டப்படி நமக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி கோர்ட் மூலம் அனை கட்டுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
கொமதேக நிர்வாகிகள் சூரியமூர்த்தி, பாலு, மாதேஸ்வரன், சின்ராஜ், பால்கந்தசாமி மற்றும் திரளான தீரன் இளைஞர் படையினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!