Symbols allotted to independent constituencies in Perambalur parliamentary constituency

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று, மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2019 தேர்தல் அட்டவணை அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 18.04.2019 அன்று தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை 23.05.2019 அன்று நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து 19.03.19 முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களால் 26.03.19 வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த 41 மனுக்கள் மீது 27.03.2019 அன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, தள்ளுபடி செய்யப்பட்ட 22 மனுக்களைத் தவிர மீதமுள்ள 19 வேட்பாளர்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தவிர மீதமுள்ள வேட்பாளர்களுக்கான சின்னங்கள், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான பொதுப்பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.சாந்தா தலைமையில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்ததாவது:

தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு ரூ.70 லட்சம் மட்டும், ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யலாம். வேட்பாளரால் செய்யப்படும் தேர்தல் செலவு சட்டத்திற்கு உட்பட்ட செலவு சட்டத்திற்கும் விதிகளுக்கும், புறம்பான செலவு என இரண்டு வகையாக கணக்கிடப்படும்.

பொதுக்கூட்டம், ஊர்வலம், போஸ்டர், பேனர்கள், பேப்பர் விளம்பர செலவுகள், டி.வி. மூலம் விளம்பர செலவுகள் போன்றவையும் வாகனங்களை பயன்படுத்துதல் ஆகிய சட்டத்திற்கு உட்பட்ட தேர்தல் செலவினங்களாகும்.

வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்தல், மதுபானம் விநியோகித்தல், இதர விதங்களில் வாக்காளர்களை கவர்வதற்காக அளிக்கப்படும் பரிசுப் பொருட்கள் ஆகியன சட்டத்திற்கு புறம்பான தேர்தல் செலவினங்களாகும். இம்மாதிரி செலவுகள் மீது இந்திய தண்டனை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்யப்படுகின்ற செலவு சிறுதொகையாக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்பட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு வேட்பாளருக்கு சாதகமாக அவர்களின் சாதனைகள் பற்றியோ, அவர் நற்பண்பு கொண்டவர், மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என்றோ அல்லது இதர விவரங்கள் பற்றியோ பத்திரிகைகளில் செய்திபோல் வெளியிடப்படுகின்ற விவரங்களும் வேட்பாளர் செலவு செய்து விளம்பரம் கொடுத்ததாகவே கட்டண விளம்பரமாக கணக்கிடப்படும்.
மேற்படி, செலவினங்கள் வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதுடன் காவல் துறைக்கோ, அல்லது நீதித்துறை நடுவருக்கோ புகார் அளிக்கப்படும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒவ்வொரு வேட்பாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ தேர்தல் செலவினம் தொடர்பாக ஒரு கணக்கு பராமரிக்க வேண்டும். இந்த கணக்கு சரியானதாகவும், உண்மைத் தன்மையை பிரதிபலிப்பதாகவும் இருக்கவேண்டும்.

மனுதாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை இக்கணக்கு எழுதப்பட வேண்டும். மேலும், தேர்தல் செலவு செய்ய தேவையான தொகையினை இந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, தேர்தல் செலவினங்கள் அனைத்தும் இந்த வங்கி கணக்கில் இருந்துதான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வங்கி கணக்கு வேட்பாளரின் பெயரிலோ அல்லது வேட்பாளா; மற்றும் அவரது ஏஜெண்ட் ஆகியோர் பெயரில் கூட்டாகவோ ஆரம்பிக்கலாம். வேட்பாளர் தாமோ அல்லது தம்மால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது வேறு நபர் மூலமாக உரிய அங்கீகார கடிதத்துடன் தேர்தல் கணக்கினை தேர்தல் கணக்கு பார்வையாளர் முன்பாக குறைந்தபட்சம் மூன்று முறை ஆய்விற்கு தாக்கல் செய்யவேண்டும்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் பணி அலுவலர்கள், சுயேட்டை வேட்பாளர்கள், மற்றும் சுயேட்டை வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!