Should the rulers join the Debankar Arts College scam? PMK Anbumani question!

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் செயலர் ஆர்.இராமசாமியின் ஊழலை தட்டிக் கேட்ட பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊழலில் திளைக்கும் கல்லூரி செயலாளருக்கு தமிழக ஆட்சியாளர்கள் துணை போவதும், அவருக்காக ஆசிரியர்களை மிரட்டுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.

அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள மக்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 1970 ஆம் ஆண்டில் தேவாங்கர் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு, அரசு நிதியுதவியுடன் தன்னாட்சி நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கல்விச் சேவையில் ஈடுபட்டிருந்த இந்தக் கல்லூரி, தவறான காரணங்களுக்காக புகழ் பெற்று வருகிறது. கல்லூரி மாணவிகளையே தவறான செயல்களில் ஈடுபடுத்த துடித்த உதவிப் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கல்லூரி செயலாளர் இராமசாமி, அவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் கல்லூரியை கபளீகரம் செய்யத் துடிக்கிறார். அவருக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கல்லூரி நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

தேவாங்கர் கலைக் கல்லூரியின் செயலாளர் இராமசாமியின் பதவிக்காலம் 09.08.2018 அன்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில், தாமே தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பதாக அறிவித்துக் கொண்டார். அவர் பதவியில் தொடருகிறாரா… அவரது நிர்வாகத்தின் கீழ் செயல்பட வேண்டுமா? என்று விளக்கம் கேட்டு கல்லூரி கல்வி இயக்குனருக்கும், இணை இயக்குனருக்கும் கல்லூரியின் முதல்வர் பாண்டியராஜன் கடிதம் எழுதி இரு மாதங்களாகியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தாம் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் 4 பேரை பணி நியமனம் செய்துள்ளார். அதற்கு முன்பாக ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் என 11 இடங்களை நிரப்பியுள்ளார். இப்பணியிடங்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. இதற்கான நியமனக் கடிதங்களில் முதல்வரை மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சுயநிதிப் பிரிவில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பலரிடம் அரசு உதவி பெறும் பிரிவில் பணி நியமனம் வழங்குவதாக தலா ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதேபோல் ஏராளமான முறைகேடுகளை செய்திருப்பதுடன், பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது. பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்காத செயலாளர் இராமசாமியைக் கண்டித்து கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 19&ஆம் தேதி வரை போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி செயலர் இராமசாமியின் அறை பூட்டப் பட்டது. இதுகுறித்த தகவல் கல்லூரிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனருக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசுத் தரப்பில் இதுதொடர்பாக பேச்சு நடத்த வந்த அனைவரும் செயலாளர் பதவியில் இராமசாமி நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கூறினார்கள். பணியாளர்களின் மற்ற கோரிக்கைகள் குறித்து அவர்கள் எதுவும் கேட்கவில்லை. ஆனால், செயலாளராக இராமசாமி நீடிக்க ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளாததால், அவர்களைப் பழிவாங்கும் நோக்குடன் அரசு உதவி பெறும் பிரிவில் 50 ஆசிரியர்கள், 20 ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் சுயநிதிப் பிரிவு ஊழியர்களுக்கு கடந்த மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இராமசாமியின் சதி தான் உள்ளது.

சட்டப்படி பார்த்தால் தேவாங்கர் கலைக்கல்லூரியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத இராமசாமி இந்த அளவுக்கு ஆட்டம் போடுவதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவருக்கு துணையாக செயல்படுவது தான் காரணம் என்று கூறப்படுகிறது. தேவாங்கர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியிருப்பதாகவும், அவற்றை நிரப்பும் வரை இராமசாமியை செயலாளர் பதவியில் தொடர வைக்க ஆட்சியாளர்களுக்கு பெருந்தொகை கையூட்டாகக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது ஒழுக்கம் ஆகும். அதற்கு முற்றிலும் எதிரான வகையில் உயர்பதவிகளில் உள்ளவர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாணவிகளை பயன்படுத்த முயன்ற உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுபவர் தான் இந்த இராமசாமி. நிர்மலா தேவியைக் காப்பாற்றி அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் துடித்துக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரிடம் தேவாங்கர் கல்லூரியை அடகு வைக்க ஆட்சியாளர்கள் துணைபோவதை ஏற்க முடியாது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்தும், அதில் கல்லூரி செயலர் இராமசாமிக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் யாருக்கு என்பதில் உள்ள சிக்கல்கள் களையப்படும் வரை கல்லூரி நிர்வாகத்தை தற்காலிகமாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தேவாங்கர் சமுதாய பிரதிநிதிகள் கோரியிருப்பதால் அதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உடனடியாக செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!