Sexual violence prevention campaign in Namakkal urged to set up a complaint committee

நாமக்கல் : அனைத்து இடங்களிலும் சுப்ரீம் ÷õர்ட் வழிகாட்டுதல்படி பாலியல் வன்முறை தடுப்பு புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் பிரசாரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) சார்பில், நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடங்கி, எல்ஐசி அலுவலகம், மோகனூர் சாலை வழியாக பூங்கா சாலை வந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையும், கண்ணியமான பணியும் உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து முறைசாரா தொழில்களில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு 6 மாதகாலம் மகப்பேறு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

குழந்தைகள் காப்பக வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பணியிடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு என கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். சுத்தமான குடிதண்ணீர் வழங்க வேண்டும். பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் மானிய விலையில் வீட்டு வசதி, குறைவான கட்டணத்தில் பஸ் வசதி செய்து தர வேண்டும். பெண்கள் அனைவருக்கும் உணவு, ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்றவைகளில் அடிப்படை உரிமைகள் அமலாக்கப்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இளவேந்தன் தொடக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலர் வேலுசாமி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் நந்தினி, பொருளாளர் மல்லிகா, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணகி, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி ஊழியர் சங்க பொறுப்பாளர் பாப்பீனா, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட துணைச் செயலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!