Seeds in subsidized prices for home gardens: Perambalur agriculture announcement

பெரம்பலூர்: தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு முன்னோடி முயற்சியாக வீட்டுத் தோட்ட காய்கறி பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம், தமிழக முதலமைச்சரால் 08.11.2017 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இதன்படி நடப்பாண்டு ரூ.20- மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடல், பாகல், பீர்க்கன், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் அடங்கிய 6000 காய்கறி பாக்கெட்டுகள் அனைத்து மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீத மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இக்காய்கறி விதைகளை வாங்க விரும்பும் விவசாயிகள் ரூ.20- மதிப்புடைய ஒரு காய்கறி விதை பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ.8- வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ.12- செலுத்தி விதைப் பாக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கென நடப்பாண்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.48,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி பாக்கெட்டுகள் வரை பெறலாம்.

இப்பாக்கெட்டுகளை பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பெற்றுப் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!