Sand should be imported directly to the PWD sector: Sella. Raasamani interview

பொதுப்பணித்துறை மணலை நேரடியாக இறக்குமதி செய்து, அரசு நிர்ணயித்த விலையில், ஏற்கனவே பதிவு செய்துள்ள லாரிகளுக்கு மட்டும், இணையதளப் பதிவு வரிசையின்படி விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் இப்போது 3 இடங்களில் மட்டுமே அரசு மணல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளது. அண்மையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல இடங்களில் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களை கண்டறிந்து கூடுதல் எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்.

இப்போது அரசு மணல் குவாரிகளில் இணையதளப் பதிவின் மூலம் பதிவு செய்யப்பட்ட மணல் லாரிகளுக்கு 1 யூனிட் ரூ.1,330-க்கு வழங்கப்படுகிறது. ஆனால் மலேசிய நாட்டில் இருந்து இப்போது இறக்குமதி செய்யப்பட்டு சென்னை எண்ணூர் துறைமுகத்தி்ல் வைக்கப்பட்டுள்ள மணல் யூனிட் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தவிர 25 கி.மீ வரை லாரி வாடகை ரூ.2,500 எனவும், இறக்கு கூலி ஒர கன அடிக்கு ரூ.125 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு மணல் குவாரிகளை காட்டிலும் இறக்குமதி மணல் யூனிட்க்கு ரூ.8,670 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மணல் இணையதள சேவையில் பதிவு செய்யப்படாத லாரிகளுக்கும் மணல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மணலை பொதுப்பணித்துறையே நேரடியாக கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கே எடுத்துச்சென்று வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு சில அரசியல் செல்வாக்கு பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே பயன்பெறுவர். மணல் ஏற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய பொதுப்பணித்துறை மூலம் தனியாருக்கு டெண்டர் விடப்படுகிறது. இந்த மணலை பொதுப்பணித்துறை வாங்கி விற்பனை செய்கிறது. இந்த நடைமுறையை மாற்றி பொதுப்பணித்துறையே நேரடியாக மணல் இறக்குமதி செய்து, குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய வேண்டும்.

சவுடு மண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு ஆற்றுப்படுகையோரம் உள்ள தனியார் பட்டா நிலங்களில் மணலை அள்ளி கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இந்த மணல் திருட்டால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஆற்றுப்படுகையோரம் தனியார் நிலங்களில் மணல் தேங்கியுள்ள இடங்களை பொதுப்பணித்துறை கையகப்படுத்தி, நில உரிமையாளருக்கு இழப்பீடு தொகையை கொடுத்துவிட்டு மணல் எடுத்து இணைய சேவையில் பதிவெற்றம் செய்யப்பட்ட லாரிகளுக்கு, இணையதள பதிவு மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 40-க்கும் குறைவான செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பொதுப்பணித்துறையில் தரச்சான்றிதழ் பெற்றுள்ளன. ஆனால் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சரச்சான்றிதழ் பெறாமலேயே தரமற்ற செயற்கை மணலை விற்பனை செய்து வருகின்றன.

போலி செயற்கை மணல் மூலம் கட்டப்படும் கட்டடங்கள் ஸ்திர தன்மை இல்லாமல் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தரச்சான்றிதழ் பெறாத செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனங்களை கண்டறிந்து, தடை செய்ய வேண்டும். மேலும் தரச்சான்று பெற்று இயங்கும் செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனங்களின் விவரத்தை இணையதளத்தில் பதிவு செய்து, அரசே விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!