Sand Quarry Movement, PWD Failure: Construction Works Freeze: Sella.Rasamani

கட்டுமான பணிகளுக்கு நாள்தோறும் 30ஆயிரம் லோடுகள் மணல் தேவைப்படுகிறது. இச்சூழலில் நாள்தோறும் 200 லோடுகள் மட்டுமே அரசு மணல் வழங்குவதால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் முழுவதும் முடங்கிப் போய் உள்ளது என, நாமக்கல்லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் நாமக்கல் மாவட்டம் குமரிபாளையம், கடலுார் மாவட்டம் மிரலுார், புதக்கோட்டை மாவட்டம் முல்லையூர், கரூர் மாவட்டம் குளித்தலை,அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் ஆகிய 5 இடங்களில் அரசு மணல் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது 4 மணல் குவாரிகள் மூடப்பட்டு, தமிழகம் முழுவதும் ஒரே ஒரு அரசு மணல் விற்பனை நிலையம் நாமக்கல் மாவட்டம் குமரிபாளையத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது.

அரசு விற்பனை நிலையத்தில் நாள்தோறும் 200 லோடுகள் மட்டுமே மணல் விற்பனை செய்யப்படுகிறது.இதிலும், 80 லோடு அரசு ஒப்பந்த வேலைகளுக்கு வழங்கப்படுகிறது.மீதமுள்ள 120 லோடுகள் மட்டுமே சங்க லாரிகளுக்கு மணல் வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு,தனியார் கட்டுமான பணிகளுக்கு நாள்தோறும் 30 ஆயிரம் லோடுகள் மணல் தேவைப்படுகிறது. ஆனால்,அரசு தினசரி 200 லோடுகள் மட்டுமே மணல் வழங்குவதால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் முழுவதும் முடங்கிப் போய் உள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போதைய தேதியில் 55 ஆயிரம் லாரிகள் மணல் எடுப்பதற்கென இணையதள பதிவு மூலம் சுமார் ரூ. 25 கோடி வரை பணம் செலுத்தியுள்ளனர். எனினும், கடந்த 5மாதங்களாக மணல் வழங்கப்படாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து எண்ணுார் துறைமுகத்தில் வைத்து மணல் விற்பனை செய்வதால் அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகள் மட்டுமமே மணல் எடுத்துச் செல்ல முடிகிறது.

தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகளை இயக்குவதற்கு மணநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் அனுமதி அளித்துள்ளது.எனினும், அரசு குவாரிகளை இயக்குவதில் ஆர்வம் காட்டாமல்,மலோசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து விற்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

மலேசிய மணல் 1 யூனிட் ரூ. 10 ஆயிரம் என, விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வதால், அவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்க மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், தேசிய பசுமை தீர்பாயமும் அனுமதி அளித்தும் இயக்கப்படாமல் உள்ள குவாரிகளையும், ஆறுகளில் அதிகளவில் மணல் திட்டு உள்ள இடங்களை கண்டறிந்து சுற்றுசசூல் ஆணையத்தில் அனுமதி பெற்று அதிக எண்ணிக்கையிலான குவாரிகளை இயக்க வேண்டும்.

தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களை அரசே கையகப்படுத்தி நிலத்திற்குரிய இப்பீட்டை நில உரிமையாளர்களுக்கு வழங்கி பட்டா நிலங்களில் உள்ள மணலை பொதுப்பணித்துறை நேரடியாக தமிழ்நாடு மணல் இணைய சேவை மூலம் குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் 40க்கும் குறைவான செயற்கை மணல் (எம்-சாண்ட்) தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பொதுப்பணித்துறை மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும், 300க்கும் மேற்பட்ட செயற்கை மணல் தயாரி்ப்பு நிறுவனங்கள் உரிய சான்று பெறாமல் கிரஷர் பவுடர்களை செயற்கை மணல் என விளம்பரப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவற்றை பயன்படுத்தி கட்டும் கட்டிடங்கள் உறுதிதன்மையன்றி இடிந்து விழும் சூழ்நிலை ஏற்படவாய்ப்புள்ளது. எனவே போலி செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.சம்மேளன செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!