Rs 30 lakh worth of AMMA Park, Gym Opened in the Namakkal By Portfolios.

நாமக்கல் பொன்விழா நகரில் ரூ. 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை இன்று அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

நாமக்கல் வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகரில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது, விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி சுந்தரம், எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

முன்னதாக வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகரில் ரூ. 6.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகங்களுக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், ரூ. 8.70 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்கான பணியையும் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

அம்மா பூங்காவில் குழந்தைகள், சிறுவர்கள் விளையாட்டுகள், இறகுப் பந்து விளையாட்டு மைதானம், பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்ய நடைபாதை, கழிப்பிட வசதி, அம்மா உடற்பயிற்சிக் கூடத்தில் நவீன உடற்பயிற்சி கருவிகள், பளு தூக்கும் கருவிகள், பெண்களுக்கான சைக்கிள் பயிற்சி உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் வசதி அமைக்கப் பட்டுள்ளன.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், அருணன், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் ராஜா, நகர துணைச்செயலாளர் நரசிம்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!