Palaru 21 dams in Andhra Pradesh and Tamil Nadu will defeat the conspiracy! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

பாலாற்றின் குறுக்கே புதிதாக 21 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. வட மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை கடுமையாக பாதிக்கக்கூடிய ஆந்திர அரசின் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆந்திர அரசு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள 21 தடுப்பணைகளும் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் தான் அமையவுள்ளன. அத்தொகுதிக்குட்பட்ட குப்பம், ராம்குப்பம், சாந்திபுரம், வீகோட்டா ஆகிய 4 மண்டலங்களில் இந்த தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. இதற்காகவும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை வலுப்படுத்தும் பணிகளுக்காகவும் ஆந்திர அரசு ரூ.41.70 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாலாறு பயணிக்கும் நிலையில், அந்த ஆற்றின் குறுக்கே 22 இடங்களில் அம்மாநில அரசு தடுப்பணைக் கட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே கட்டப்பட்ட பல தடுப்பணைகளின் உயரத்தையும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இதனால் பாலாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது அரிதானதாகவும், அதிசயமானதாகவும் மாறியுள்ளது. இத்தகைய சூழலில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.

2014-ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் ஏராளமான புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணைகளின் உயரங்களும் அதிகரிக்கப்பட்டன. இந்த பணிகள் நடைபெற்ற போது தமிழகத்தில் முதலமைச்சர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூவருமே இதை வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, அவற்றை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணமாகும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படுவது குறித்து தமிழக அரசுக்கு பா.ம.க. பலமுறை கடுமையாக எச்சரித்தும் கூட, எல்லா பணிகளும் முடிவடைந்த பிறகு தான் இதுகுறித்து பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதினார். ஆனால், அதற்குள்ளாக அனைத்துப் பணிகளையும் ஆந்திரா முடித்து விட்டது.

ஆந்திர மாநிலம் திட்டமிட்டபடி புதிய தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டால் அம்மாநிலத்தில் 33 கி.மீ மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே 43 தடுப்பணைகள் இருக்கும். அம்மாநிலத்தில் பாயும் ஒட்டு மொத்த பாலாறு ஆறாக காட்சியளிக்காமல் 43 தனித்தனி ஏரிகளாக காட்சியளிக்கும். இதனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது. இதனால் பாலாற்றை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தரிசாக மாறும். பாலாறு பாலைவனமாக மாறும்.

இந்த பேரழிவுகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், பாலாற்றுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்று தான் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. பாலாற்றில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை தாரை வார்த்தது யார்? என்பது குறித்து இரு திராவிடக் கட்சிகளும் வார்த்தைப் போரை நடத்தி வருகின்றன. அதில் காட்டிய வேகத்தில் நான்கில் ஒரு பங்கை களத்தில் காட்டியிருந்தால் ஆந்திரம் கட்டிய தடுப்பணைகளை தடுத்து இருந்திருக்கலாம். எனவே, பாலாறு சார்ந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல், பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் சதித்திட்டத்தை தமிழ்நாடு முறியடிக்க வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!