Old man killed in property dispute near Rasipuram: son, daughter-in-law, sentenced to life imprisonment

ராசிபுரம் அருகே சொத்து தகராறில் முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை வைரபாலிக்காட்டை சேர்ந்தவர் வரதப்பன் (வயது 71). விவசாயி. இவருக்கு குப்பாயி, பாவாயி, நல்லாயி என 3 மனைவியர். இதில் குப்பாயி, பாவாயி இறந்து விட்டனர். வரதப்பனுக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டில் வரதப்பன் மூத்த மனைவியின் மகன் செல்வம்(47) என்பவருக்கு 2 ஏக்கர் பிரித்து கிரயம் செய்து வைத்தார். மூன்றாவது மனைவி நல்லாயியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் 2015ல் மீதமுள்ள 2 ஏக்கர் நிலத்தை நல்லாயி மகன் நல்லதம்பி(30) என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்து விட்டார்.

இதை அறிந்த செல்வம், அவரது மனைவி தமிழரசி(43), மகன் கார்த்திக்(20) ஆகிய 3 பேரும் கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ம் தேதி இரவு நல்லதம்பி வீட்டிற்குச் சென்று தந்தை வரதப்பனிடம் தான செட்டில் மென்ட் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் எனக்கேட்டு தகராறு செய்தார்.

அப்போது செல்வம், அவரது மனைவி தமிழரசி, மகன் கார்த்திக் ஆகியோர் வரதப்பனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த வரதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், அவரது மனைவி தமிழரசி, மகன் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட செல்வம், தமிழரசி, கார்த்திக் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!