Mekatatu dam: all-party meeting to take action, the PMK request to Tamilnadu CM

மேகதாது அணைக்கட்டுப் பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே. மணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

கார்நாடாகாவில் மேகதாது புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்தது கண்டனத்துக்குரியது. இந்தச் செயல் தமிழகத்துக்கு மிகப் பெரிய அநீதியாகும். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. இந்த பிரச்னையில் ஏற்கனேவே இரண்டு முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல்தான் மத்திய அரசு ஆய்வுப் பணிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தையும் மத்திய அரசு மதித்து நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை. தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு நின்று விடாமல், அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், அனைத்து கட்சித் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களோடு பிரதமரைச் சந்தித்து தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் மழைக் காலங்களில் நீரை முழுமையாகச் சேமிக்க உரிய கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும். சேலத்தில் இரும்பாலைக்காக சுமார் 4,900 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் 1,000 ஏக்கர் மட்டுமே ஆலைப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய நிலங்கள் அப்படியே உள்ளன. இதனால் அரசுத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நிலத்தை பயன்படுத்தவில்லையெனில், அதனை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, நிலத்தை நில உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் முட்டை, கோழி, லாரி தொழிலை பாதுகாக்க தேவையான திட்டடங்களை அரசு அறிவிக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவது, குறைந்த மின் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பாமக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. முதல் இடத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள் கூட்டத்துக்கு பாமக துணைப் பொதுச் செயலர் பொன் ரமேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், துணை அமைப்புத் தலைவர் சுதாகர், இளைஞர் சங்கத் துணைச் செயலர் சுகுமாறன், ஊடகப்பிரிவு துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரமாபிரபா, மகளிர் சங்க மாவட்டச் செயலர் கோமதி, மாணவர் சங்க செயலர் ராஜேஷ், இளம்பெண்கள் சங்க தொகுதி செயலர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!