Jewelry to women walking alone near Namakkal flush: 5 people including the boy arrested

கற்பனை காட்சி


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூர் பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறித்த சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் மல்லிகா(70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த நகையை பறித்துச்சென்றுவிட்டனர்.

இதுபோல் திருச்செங்கோடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த வசந்தி(50), சித்தாளந்தூரை சேர்ந்த முத்துப் பிரியா(33), பொத்தனூரை சேர்ந்த ராஜலட்சுமி(27) ஆகியோரிடமும் மர்ம நபர்கள் நகைகளை பறித்துச்சென்று விட்டனர். தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருச்செங்கோடு மற்றும் வேலூர் டிஎஸ்பிக்களுக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில் வேலூர் போலீஸ் எஸ்ஐ சகாயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பூபதி (எ) பூபதிராஜன் (20), திருச்செங்கோட்டை சேர்ந்த புவனேஸ் (எ) புவனேஸ்வரன்(20) என்பவரும் பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாக நடந்து சென்ற 2 பெண்களிடம் 9 சவரன் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

அதேபோல் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(21), பிரவீன்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் சுமார் 13 பவுன் தங்க நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.

5 பேரையும் கைது செய்த போலீசார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 23 பவுன் நகைகள், 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

இந்த வழக்குகளில் தீவிரமாக புலன் விசாரணை செய்து விரைவாக வழக்குகளை கண்டுபிடித்த தனிப்படையினரையும், வேலூர் டிஎஸ்பி ராஜூவையும் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பாராட்டினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!