ISO Certification for Perambalur District Anganwadi Centers: Purchased for Price?

பெரம்பலூர் மாவட்ட கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்கு தரமான பாதுகாப்பான முன்பருவக் கல்வி பெறும் சூழ்நிலை வழங்கிய 4 அங்கன்வாடி மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 490 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, மைய சுகாதாரம், கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு, முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் ஆலத்தூர் வட்டாரத்தில் புதுவிராலிப்பட்டி, பெரம்பலூர் வட்டாரத்தில் எளம்பலூர் இந்திரா நகர், வேப்பந்தட்டை வட்டாரத்தில் அம்பேத்கார் காலனி மற்றும் வேப்பூர் வட்டாரத்தில் சின்னவெண்மணி காலனி, ஆகிய 4 அங்கன்வாடி மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

சிறப்பாக செயல்பட்டு வரும் மேற்கண்ட 4 அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம், மாவட்ட திட்ட அலுவலர் ச.பூங்கொடி காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தனியார் பள்ளிகள் கூட தரக்கட்டுப்பாட்டு சான்று பெற இயலாத நிலையில் அரசு நிறுவனம் உலகத்தரத்தில் அங்கன்வாடி மையங்கள் நடத்தி சான்றிதழ் பெற்றதற்கு மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறைக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

ஆனால், ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் என்பது தற்போது கூவி கூவி விற்கப்படும் ஒரு பொருளாகிவிட்டது. ரூ. 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரத்திற்குள் திருச்சியில் உள்ளள முகவர் மூலம் கிடைக்கிறது. மேலும், மக்களுக்கு முறையாக சேவை வழங்க வேண்டிய அரசாங்கத்தில் அரசியல்வாதிகளை போன்றே அதிகாரிகளும் ஏய்க்க தொடங்கிவிட்டனர்.

ஒய்யார கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளுக்குள்ளே ஈறும் பேனுமாம் பழமொழியாகிவிட்டது.

பல அங்கன்வாடிகளில் உரிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!