Intensifying Rainwater Harvesting Program to Improve Underground Water Resources PMK Ramadas

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் தான் இதற்குக் காரணம் என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழகத்தில் இப்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக குறைந்து விட்ட நிலையில், அடுத்து மழை பெய்யும் வரை தண்ணீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பில்லை. எனினும், நிலைமையை சமாளிக்க சென்னையில் ஒவ்வொரு நாளும் 12,000 வாகனங்கள் மூலம் 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், சில இடங்களில் மக்கள் இரவு நேரங்களில் தண்ணீருக்காக காத்திருப்பது, நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பது உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டாலும் கூட, தண்ணீர் பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அதேபோல், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தண்ணீருக்கான தவிப்பு என்பது மிகக் கொடுமையானது ஆகும். அதேநேரத்தில் இதற்காக இயற்கையை குறை கூற முடியாது. இயற்கை கொடையாக கொடுத்த தண்ணீர் வளத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நமது தவறு தான். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை ஆகும்.

தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறது. பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் களத்தில் நின்று தூர்வாரியிருக்கிறோம். ‘‘நீர் ஆதாரங்களை பராமரிக்கும் நோக்குடன் ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் திருவிழா நடத்தி, ஏரி – குளங்களை தூர்வார வேண்டும்; ஒரு வீட்டின் தண்ணீர் அடுத்த வீட்டுக்கும், ஓர் ஊரின் தண்ணீர் அடுத்த ஊருக்கும் செல்லாத அளவுக்கு மழைநீர் வடிகால்கள் வலிமையாக கட்டமைக்கப்பட வேண்டும்’’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர் ஆகும். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லாதது தான் இன்றைய நிலைக்குக் காரணமாகும். பா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களை சிறப்பு விருந்தினராக கொண்டு நீர்வள மேலாண்மைக்கான மாநாட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடத்தியது. அதில் மழைநீர் சேமிப்புக்கான திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பயனாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், அதன்பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது.

தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது.

வழக்கமாக பெய்யும் மழையில் 40% தண்ணீர் கடலில் கலக்கிறது; 35% ஆவியாகி விடுகிறது. மீதமுள்ள நீரில் 14% பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10% மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5% கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை. 95% நீர் வீணாக கடலில் தான் கலக்கிறது. சாலைகள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும்.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!