In Tamil Nadu, the people are ready to vote against the federal and state governments: All India Cong. General secretary’s speech

நாமக்கல் : அடுத்து வருகின்ற தேர்தலில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க பொதுமக்கள் தயாராகிவிட்டனர் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கூறினார்.

ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் எம்.பி ராணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கீழனூர் ராஜேந்திரன், மாநில துணைத்தலவர் சுபசோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத், மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பார்லி தேர்தலில் பாஜக பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களை செய்து வெற்றிபெற்று மோடி பிரதமராகிவிட்டார். அவர்கள் வாக்குறுதியில் பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் கொடுப்பதாக கூறினார்கள், இதுவரை ஒரு பைசாகூட போடவில்லை.

ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறினார்கள். தற்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்குப் பிறகு பல சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் நிறைந்த மாநில அரசை மத்தியில் ஆளும் பாஜ கட்சி பின்னால் இருந்து இயக்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன், பொதமக்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் எப்போது தேர்தல் வரும் பாஜக மற்றும் அதிமுகவுக்கு எதிராக ஓட்டளிக்கலாம் என்று காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், சீனிவாசன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெய்ஞானமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் ராம்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் இளங்கோ, குப்புசாமி உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!