Humanitarian Week closing ceremony in the alampadi village

மனித நேய வார நிறைவு விழாவில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் துரை பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) துரை தலைமையில் ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மனித நேய வார நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துரை பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் துரை பேசியதாவது:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் மனித நேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே மனித நேய உணர்வை வளர்க்கும் வகையில் மனித நேய வாரவிழா அனுசரிக்கப்படடு இன்று நிறைவு விழா சிறப்பாக நடைபெறுகிறது.

சாதி-மத பேதங்களை கடந்து, இனம்-மொழி என்ற பாகுபாடு இல்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருவருக் ஒருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. மாணவ மாணவிகளாகிய நீங்கள் இதனை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் மனிதநேயமிக்க சமுதாயத்தை உருவாக்க உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன், என பேசினார்.

மனித நேய வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் ஆதிதிராவிட நல பள்ளி மாணவ மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் நடனப்போட்டிகளில் வெற்றி பெற்ற களரம்பட்டி, ஆலம்பாடி, பாடலூர், ஈச்சம்பட்டி, ஒகளூர், லாடபுரம், நத்தக்காடு, பசும்பலூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆதிதிராவிட நல பள்ளி மற்றும் விடுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) துரை பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆதிதிராவிட நல பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி, தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) முருகன், ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலர்கள், மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!