Guidance for victims of accident and criminal cases: Namakkal Police Department Announcement

விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக நிவாரணம் பெற உதவும் வகையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை வழிகாட்டுதல் முகாம் நடத்தப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

நாமக்கல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம், கொடுங்காயம் ஏற்பட்டால் ரூ.50,000 அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இதுபோன்று 100 வழக்குகள் பதிவானால் 10 பேர் மட்டுமே, அதாவது 10 சதவீதம் பேர் மட்டுமே நிவாரணம் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணத் தொகையைப் பெற பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழிகாட்டுவது ஆகும்.

இந்த நிவாரண தொகையைப் பெற நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாராவது இந்த தொகையை சீக்கிரம் பெற்று தருகிறேன் என கூறி பணம் கேட்டால் அவர்களை நம்ப வேண்டாம்.

குற்ற வழக்குகளை பொருத்த வரையில் நிவாரணத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நிர்ணயம் செய்யும். விபத்தில் நீங்கள் பெறும் இன்சூரஸ் இழப்பீட்டிற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களை வரவழைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்குவது இதுதான் முதல் முறையாகும்.

நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூரில் நடந்த இந்த முகாம்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்து உள்ளனர். இதுபோன்ற வழிகாட்டுதல் முகாம் இனி 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதேபோல், நமது மாவட்டத்தில் இந்த ஆண்டு 36 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளன.

இவற்றில் பாதிக்கப்பட்ட நபர்களில் சிலருக்கு வாரிசு இல்லை. மீதமுள்ளவர்களில் யார் சரியான வாரிசு என்பதை அறிந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், வழக்கின் தன்மை குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறோம்.

மக்களை நோக்கி அரசு என்ற திட்டத்தின் அடிப்படையில் இதை செய்து வருகிறோம் என்றார். பின்னர் அவர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுஜாதா, டிஎஸ்பி ராஜேந்திரன், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!