GST Opposition to taxation: Hotels closure in Perambalur district

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஹோட்டல்கள் அடைப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.


பெரம்பலூர் : ஓட்டல்களுக்கான சரக்கு சேவை வரியை (ஜி.எஸ்.டி.) வருகிற ஜூலை மாதம் முதல் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.50 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 0.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 2 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியை 12 சதவீதமாகவும் ஏ.சி. வசதி கொண்ட ரெஸ்ட்டாரண்ட் ஓட்டல்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 500 ஓட்டல்கள், லாட்ஜ்கள் மூடப்பட்டுள்ளது. பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால், வெளியூரில் இருந்து வந்த பயணிகள் சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர். இதுபோல் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரியும், கல்வி பயிலும் இளைஞர்கள், விடுதியில் தங்கியிருப்பவர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். மேலும், இது 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் என்பதால் இரவு நேர நைட் கிளப் புரோட்டா கடைகளும் அடைக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் கம்மங்கூழ், கலவை சாதங்கள், மற்றும் கறிக்குழம்பு சாப்பாடுகளும் விற்று தீர்ந்தன. ஆங்காங்கே நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மருந்து கடைகள் அடைப்பு

அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்து கொள்முதல் விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய ‘இ-போர்ட்டல்’ எலக்ட்ரானிக்ஸ் சேவையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 200 மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!