Grievance for electricity pensioners in Erode on 19th

ஈரோட்டில் வரும் 19ம் தேதி மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார வாரிய உத்திரவின்படி ஈரோடு மண்டலம் தலைமைப் பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிற மின்வாரிய அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர் மற்றும் பணியாளர்கள் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் உடனடியாக தீர்த்து வைக்கவும் மற்றும் உரிய ஆலோசனை வழங்கவும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினர் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் மற்றும் உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்தாண்டு மூன்றாம் காலாண்டிற்கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 19ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ஈரோடு ஈவிஆர் சாலையில் அமைந்துள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடைபெறுகிறது.

எனவே மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளலாம். தனிநபர் மனுக்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகள் காலையிலேயே பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!