Govt. School Students have to pass 100 percent of public exams; Minister Thangamani requested

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 14 அரச பள்ளிகளைச் சேர்ந்த 2854 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம் என்பது கல்வி மாவட்டமாகும். இங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு தனியார் பள்ளிகளைப்போல் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வண்ண சீருடைகளை வழங்கியுள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேவையான இலவச பாடப்புத்தகம், சீருடை, புத்தகப்பை, இலவச சைக்கிள், லேப்டால் போன்ற அனைத்து உதவிகளையும் அரசே இலவசமாக செய்து தருகிறது. இந்த நிலையில் அரசு எதிர்பார்ப்பது அரசுப்பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான்.

இந்த விழாவில் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் புதுச்சத்திரம் மற்றும் எர்ணாபுரம் ஆகிய 2 அரசுப்பள்ளிகள் மட்டுமே பொதுத்தேர்வில் 100 சதவீதம் பெற்றுள்ளது. மீதமுள்ள பள்ளிகள் 80 முதல் 90 சதவீதம் வரை பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் 35 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே மாணவர்கள் பாஸ் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது 35 மதிப்பெண்கள் கூட பெறாத மாணவர்கள் வாழ்க்கையில் படித்து முடித்துவிட்டு என்ன செய்ய முடியும் என்பதை என்னிப்பார்க்க வேண்டும்.

மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தையும், பெற்றோர்களின் கனவையும் நினைத்துப் பார்த்து நன்றாகப் படித்து அனைத்துப்பள்ளி மாணவர்களம் 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள்தான் இன்று டாக்டர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இதை மாணவர்கள் உனரவேண்டும். பொதுத்தேர்வுளுகளுக்கு இன்னும் 3 மாதம் அவகாசம் உள்ளது. எனவே இப்போதிருந்து நன்றாகப் படித்தால் எளிதாக 100 சதவீதம் தேர்ச்சிபெற முடியும். இதற்கு மாணவர்களும், ஆசிரிர்களும் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் எம்.பி. சுந்தரம், எம்எல்ஏக்கள் நாமக்கல் பாஸ்கர், சேந்தமங்கலம் சந்திரசேகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக சிஇஓ உஷா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன் நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!