Fast swine flu: Take preventive measures without neglect! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ளள அறிக்கை :

மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல், இப்போது தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தெற்கு எல்லையான திருநெல்வேலியில் தொடங்கி சென்னை வரை பலர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 4 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

திருச்சி தோகைமலையில் இன்னொருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, வேலூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 5 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார். ஆனால், வழக்கம் போலவே அவர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்து விட்டதாக அறிவித்து, சென்னையில் பன்றிக்காய்ச்சல் பரவியதை மூடி மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இது அறியாமையை ஊக்குவித்து பன்றிக் காய்ச்சல் பரவத் தான் உதவுமே தவிர, தடுப்பதற்கு உதவாது.

பன்றிக் காய்ச்சல் கடந்த 2009-ஆம் ஆண்டு தான் இந்தியாவில் பெரிய அளவில் பரவியது. அதற்குப் பிந்தைய 10 ஆண்டுகளில் நடப்பாண்டில் தான் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் 1000-க்கும் அதிகமானோரும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நூற்றுக்கும் மேற்பட்டோரும் பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களால் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த விவரங்கள் வெளிவந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அரசு, அவற்றை மறைக்கிறது.

அண்டை மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் தெரியவந்தவுடன் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுக்கும் நோக்கத்துடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியது உண்மை.

அதன்பின்னர் இப்போது வரை பன்றிக்காய்ச்சலைத் தடுக்க வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் என்பது திடீரென ஒரு சில நாட்களில் ஏற்பட்டதல்ல.

2018-ஆம் ஆண்டில் இதுவரை 232 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இறந்துள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஆண்டு மொத்தம் 3315 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். அந்த அனுபவத்திலிருந்து தமிழக அரசு பாடம் கற்றிருந்தால் நடப்பாண்டில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், குட்கா விற்பனையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் தமிழக சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கூட இல்லை.

பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருப்பதால், பன்றிக் காய்ச்சலை நினைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.

பன்றிக் காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மட்டும் தான் பரவும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேறிய வைரஸ்கள் கட்டிடங்களில் தரைகள், கதவுகள், நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றில் சில மணி நேரங்கள் முதல் இரு நாட்கள் வரை உயிர்வாழக்கூடும். அவற்றை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் கைகளை சோப்புகளால் கழுவுவது, கழுவாத கைகளால் கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றை தொடாமல் தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவுக்கு விலகி இருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

வடகிழக்கு பருவமழை எந்த நேரமும் தொடங்கக்கூடும் என்பதால் ஈரப்பதமான சூழலில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 வைரஸ்கள் வேகமாகப் பரவக்கூடும்.

எனவே, இனியும் அரசு அலட்சியம் காட்டாமல் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!