Fake farmers who are Change Black Money : find a good income tax to find income taxes

Model Photo


கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் போலி விவசாயிகளை அடையாளம் கண்டு தடுத்திட விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்க வேண்டும்.

இதனை செயல்படுத்தும் முன்னர் விவசாய கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி தெரிவித்தார்.

நாமக்கல்லில் நல்லசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தற்போது கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. கஜா புயலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழல் மாற்றத்தால் இந்த நோய் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசியை உடனடியாக போட வேண்டும். மழை காலத்தில் இந்த நோய் வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் வரும் காலத்தில் ஆகஸ்ட் மாதத்திலேயே கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கையெடுக்க வேண்டும்.

நிகழாண்டில் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளுக்கும் நோய் தாக்குதல் உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் தரமான தடுப்பூசிகளை போட நடவடிக்கையெடுக்க வேண்டும். மேலும் கோமாரி நோய் கட்டுக்குள் வரும் வரை மாட்டு சந்தைகள் கூடுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.

காற்று மாசுபாட்டை தடுக்க வாகனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பட்டாசு வெடிக்க நிபந்தனை விதித்ததை வரவேற்கிறோம். அதே சமயத்தில் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாற்றுத்தொழி்ல் வாய்ப்பை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனை கூடாது என கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. இதனை வரவேற்கிறோம். மரண தண்டனை இல்லை என்றால் குற்றங்கள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்ட வேறு எந்த தொழிலையும் அறிந்திராத விவசாயிகளுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்படுகிறது.

விவசாய வருமானத்துக்கு வருமான வரி இல்லை என்பதால் கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவும் கருவியாக சிலர் விவசாயத்தை பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்க விவசாய கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்திவிட்டு, விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் சிலரின் முயற்சி தடுக்கப்படும்.

கள் இறக்க அனுமதி, நீரா இறக்க, விற்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வரும் 17 ஆம் தேதி காலை கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தொடங்கும் இந்த பயணம், திருப்பூர், ஈரோடு, சேலம், அரூர், திருவண்ணாமலை, வேலூர் வழியாக சென்று 19 ஆம் தேதி இரவு சென்னையில் நிறைவடைகிறது. அன்று இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!