Extend the deadlines for crops in stormy areas! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப் பாசன மாவட்டங்களில் பெரும்பான்மையான உழவர்கள் தாங்கள் அரும்பாடு பட்டு வளர்த்த பயிரை இழந்து தவிக்கும் நிலையில், மீதமுள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு காப்பீடு செய்வதில் மிகக்கடுமையான இடர்ப்பாடுகளை சந்தித்து வருகின்றனர். காவிரி பாசன மாவட்ட உழவர்களின் இந்தப் பிரச்சினையை அரசு கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்படும் பயிர்கள் ஒவ்வொரு ஆண்டும் வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அத்தகைய பாதிப்புகளில் இருந்து உழவர்களை ஓரளவாவது காப்பது பயிர்க்காப்பீடு தான். நடப்பு பருவத்தில் கஜா புயலால் பெரும்பான்மையான பயிர்கள் சேதமடைந்து விட்டன. இவை தவிர பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. எனினும், இந்தப் பயிர்களுக்கு இன்னும் காப்பீடு செய்யப்படவில்லை. இயற்கைச் சீற்றங்களால் எந்த நேரமும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் தங்களின் பயிர்களைக் காப்பீடு செய்ய வேண்டும் என உழவர்கள் நினைக்கின்றனர். ஆனால், பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்குள்ளாக பயிர்க்காப்பீடு செய்வது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

பயிர்க்காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் சான்றிதழ்கள் தேவை. ஆனால், அச்சான்றிதழ்களை வழங்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கஜா புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அத்தகைய சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. இதனால் வேளாண்மை உதவி அலுவலர்கள் வழங்கும் சாகுபடி சான்றிதழைக் கொண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை என்றாலும், பயிர்க்காப்பீடு செய்வதில் உள்ள நெருக்கடிகளை தமிழக அரசின் இந்த சலுகை முற்றிலுமாக களைந்து விடவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மட்டும் தான் வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்ய முடியும். மற்றவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலமாகவே காப்பீடு செய்ய முடியும். கச்சா புயல் பாதிப்புள்ள பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் பொதுச் சேவை மையங்கள் செயல்படவில்லை. புயல் பாதிப்பு அதிகமில்லாத பகுதிகளில் பொதுச்சேவை மையங்கள் செயல்பட்டாலும் கூட, அங்கு புயல் நிவாரணம் குறித்த தகவல்களை தொகுக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுவதால் அங்கும் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதில்லை.

பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்வது சாத்தியமில்லை. எனவே, பயிர்க்காப்பீடு செய்வதற்கான கெடுவை திசம்பர் 31-ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும். அத்துடன் பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியத்தை உழவர்கள் சார்பில் தமிழக அரசே செலுத்த வேண்டும். 2012&13 ஆம் ஆண்டில் இயற்கை சீற்றத்தால் காவிரி பாசன மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட போது, தமிழக அரசே பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியத்தை செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2016-17 ஆம் ஆண்டு வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான காப்பீட்டுத்தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என்பதால், அரசு தலையிட்டு அனைத்து உழவர்களுக்கும் காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.

காவிரிப் பாசன மாவட்டத்தில் மா, பலா, புளிம், சவுக்கு, இலுப்பை போன்ற மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. அவை புயலில் சாய்ந்து விட்டதால் 2006-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதைப் போன்று இப்போதும் அந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பாதிக்கப்பட்ட உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!