Does the CBSE continuously abolish the Nadars without correcting the textbook? PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள பாடத்தை நீக்குவதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த மத்திய அரசு இதுவரை நீக்கவில்லை. மாறாக பாடத்தில் சில வார்த்தைகளை மட்டும் மாற்றி விட்டு, நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளை நீடிக்கச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடநூலின் 8-ஆவது பாடமாக ‘ஆடைகள்: ஒரு சமூக வரலாறு’ இடம் பெற்றுள்ளது. அதில், 168வது பக்கத்தில் ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள்; நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.

நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அந்த பாடத்தை சி.பி.எஸ்.இ நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன் 25.10.2012 அன்று அறிக்கை விடுத்தேன். அதுமட்டுமின்றி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு தொடங்கி இப்போதைய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வரை அனைத்து அமைச்சர்களிடமும் பா.ம.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், அவற்றால் பயன் ஏற்படாத நிலையில், இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி 24.08.2016 அன்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். அதுமட்டுமின்றி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் 16.11.2016 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கும்படி ஆணையிட்டது. அதன்படி ஆந்த பாடம் நீக்கப்படும் என்று 19.12.2016 அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், அந்தப் பாடமோ அல்லது அந்தப் பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளோ நீக்கப்படவில்லை. மாறாக சில வார்த்தைகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளன. அந்தப் பாடத்தில் ஏற்கனவே இருந்த நாடார்கள் பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்தவர்கள், அவர்கள் கள் இறக்கும் சமுதாயத்தினர் என்ற இரு பகுதிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மலையாள நாயர்கள் கன்னியாகுமரி பகுதியின் பூர்வகுடிகள் அல்ல…. அவர்கள் பிழைப்பு தேடித்தான் குமரி மாவட்டத்தில் குடியேறினர் என்ற உண்மை பதிவு செய்யப்படவில்லை. இப்போதும் அந்தப் பாடத்தைப் படித்தால் மலையாள நாயர்களுக்கு நாடார்கள் அடிமைகளாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் வார்த்தைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மலையாள நாயர்கள் உயர்சாதியினர் என பழைய பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாடத்தில் நாடார்கள் கீழ் சாதியினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே கைவிடப்பட்டு விட்ட நிலையில், பல இடங்களில் சாணார்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரே ஒரு இடத்தில் மட்டும் சாணார்கள் பின்னாளில் நாடார்கள் என்றழைக்கப்பட்டனர் என அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விஷமச் செயல்களாகும்.

அதேபோல், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக அவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால் அவர்களுக்கு ஆடை அணியும் உரிமை கிடைத்ததாகவும் பாடத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக அய்யா வைகுந்தர் 1936-ஆம் ஆண்டிலிருந்து தாம் மறையும் வரை போராட்டம் நடத்தியதன் பயனாகவே நாடார் சமுதாயப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை வழங்கப்பட்டது என்பதால், உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், ஆடை சீர்திருத்தத்தில் அய்யா வைகுந்தர் போன்ற இந்து சீர்திருத்தவாதிகளும் பங்கேற்றனர் என்ற அரை வரியை மட்டும் புதிதாக சேர்த்துள்ள பாடநூல் ஆசிரியர்கள், வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது சகோதர்களாக வாழும் இந்து, கிறித்தவ நாடார் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இதுவும் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம் ஆகும்.

நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான பாடத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கொடுத்த அழுத்தங்கள், உயர்நீதிமன்ற வழக்கு ஆகியவற்றைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு திசம்பர் 19ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணைச் செயலர் மனோஜ்குமார் ஸ்ரீவத்சவா பிறப்பித்த ஆணையில்,‘‘நடப்பு 2016-17 கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடநூலின் பக்கம் 168-ல் இடம் பெற்றுள்ள ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற குறுந்தலைப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இதன் மீதான கேள்விகள், கட்டுரைகள் எதுவும் இனி தேர்வில் கேட்கப்படக் கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்பிரிவு தொடருவதுடன் ஒரு சில மாற்றங்களுடன் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அம்சங்கள் அப்படியே நீடிக்கின்றன. இதை ஏற்க முடியாது. ஏற்கனவே உறுதியளித்தவாறு நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற பிரிவு முழுமையாக நீக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

#Nadar #PMK Ramadoss #CBSE


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!