Do not let the educated people become politicians: Kamal Hassan

படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்துவிட்டது என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள் மத்தியில் நேற்று பேசிய அவர் மேலும் கூறியது:

நாமக்கல் என்பது இந்தியாவின் பேருந்து நிலையம். இங்கு பெட்ரோல், டீசல் விலை குறித்து சில உண்மைகளை மக்களிடம் தெரிவித்தாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 44 டாலராக இருந்த போது பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.

கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக இப்போது 100 டாலரை தாண்டி நிற்கிறது. பெட்ரோல் விலை ரூ.87 வரை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ.4.5 லட்சம் கோடி என்பது எனக்கு வந்த தகவல். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.4.5 லட்சம் கோடி சம்பாதித்து வருகின்றனர்.

இது மக்களுக்கு சென்றடைய வேண்டும், அதை நீங்கள் கேட்க வேண்டும். மக்களுக்கான புரட்சி தொடங்கிவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்கான அடையாளங்கள் இங்கே தெரிகிறது. அதற்கான தகவல்களை தர வேண்டியது மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாகிறது.

நான் சொல்லும் புரட்சி கத்தியின்றி, ரத்தமின்றி தான். நம் போராட்டங்கள் எல்லாம் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக்கொண்டிக்கிறது. இன்றும், என்றும் அப்படித்தான் இருக்கும்.

என்னை முழு நேர அரசியல்வாதியா என சந்தேகப்பட்டு கேட்கின்றனர். நான் சென்ற பல இடங்களுக்கு, அரியணையில் ஏறி அமர்ந்திருக்கும் பலர் செல்வதில்லை என்பது தான் உண்மை. நான் தொடந்து திரைப்படங்களில் நடிப்பதாக கூறுகின்றனர்.

எம்ஜிஆர் எம்எல்ஏ என தலைப்பு போட்டு எத்தனை திரைப்படங்கள் வந்துள்ளன, அவரை விடவும் என்னை கேள்வி கேட்பவர்கள் முழு நேர அரசியல் வாதியா? எனக்கும் வைத்துக்கொண்டு, மக்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காகதான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

முழு நேரமும் அரசியல் செய்து கொண்டு வேறு போக்கிடம் இல்லை என்றால், அவன் மக்கள் பணத்தில் அல்லவா கைவைப்பான். அரசியல்வாதி முழு நேரம் மக்களோடு தான் இருப்பான் என எதிர்பார்க்க கூடாது. அரசியல்வாதிகளுக்கும் தனியாக தொழில் இருக்க வேண்டும். திரைப்படத்தொழில் இருந்த என்னுடைய நேர்மை, அரசியலில் தொடரும்.

மேடைப் பேச்சு அலங்காரத்தில் உண்மையை மறைக்க முடியாது. அவர்களை விட தெளிவாக பேசி விட முடியும் என்று நம்பவில்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களை விட கண்டிப்பாக என்னால் பல மடங்கு நேர்மையாக இருக்க முடியும். அதற்கு ஏதுவாக நீங்களும் நேர்மையாக இருக்க வேண்டும். அனைவரும் நேர்மையாக இருந்தால் தான் நேர்மையான தமிழகம் உருவாகும்.

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடாதீர்கள். இதனால் அரசிடமிருந்து மக்களுக்கு செர வேண்டியவை சென்று சேருவதில்லை. ஓட்டை பணத்துக்கு விற்கும் நிலை மாறினால், மக்களுக்கான தேவைகளை உரிமையோடு கேட்டுப்பெற முடியும்.

கிராம சபை என்பது, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் எடுக்கும் முடிவு அளவிற்கு இணையான பலம் கொண்டது. என்னால் இயன்றவரை நான் என் கடைமைகளை செய்கிறேன். உங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான் அரசியல் அசிங்கம் ஊரையே சூழ்ந்துவிட்டது. நீங்கள் உங்கள் கடமையை செய்தால், என் கடைமையை நான் ஆற்றுவது மிக, மிக எளிதாகும். நான் எதிர்பார்க்கும் நாளை நமதாகும் என்றார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!