“Do not get too much milk and do not create artificial scarcity”: Milk Agents Association

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:

சுழன்றடிக்கும் புயலோ, விடாது பெய்யும் அடைமழையோ, கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளமோ, சீறும் சுனாமியோ, நடுங்க வைக்கும் கடுங்குளிரோ, உலகையே புரட்டிப் போடும் நிலநடுக்கமோ இவற்றில் இயற்கை சீற்றங்கள் எதுவரினும்..,

அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டங்களோ, சமூக விரோத சக்திகளின் வன்முறை வெறியாட்டமோ இதில் எதுவாகினும்,

இந்தியாவின் முதல் குடிமகன், பாரத பிரதமர், தமிழகத்தின் முதல்வர் என உயர் பதவியில் இருப்பவர்களோ அல்லது எங்களை ஈன்றெடுத்தவர்களோ, உடன்பிறப்புக்களோ, நெருங்கிய உறவுகள் இதில் எவர் மரணித்தாலும்…

பால் முகவர்களின், நட்புகளின், உறவுகளின் இல்லங்களில் சுக, துக்க நிகழ்வுகள் எவை நடந்தாலும்… உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும்…

பால் முகவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டாலும், திருடப்பட்டாலும்…. எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு “பால் விநியோகம் வழக்கம் போல் தங்குதடையின்றி நடைபெறும்”.

தங்கள் மக்கள் (குடும்பத்தினர்) நலனில் அக்கறை கொள்ளாவிட்டாலும் கூட பொதுமக்கள் நலனில் 100% அக்கறை கொண்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பால் வணிகத்தை சேவை சார்ந்த தொழிலாகவே சுவாசித்தும், நேசித்தும் வருபவர்கள் தான் பால் முகவர்கள்.

எனவே பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி, அதன் காரணமாக பால் கிடைக்காது என அச்சம் கொண்டு பால் பாக்கெட்டுகளை அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனெனில், நீங்கள் அவ்வாறு பால் கிடைக்காது என அச்சம் கொண்டு பால் பாக்கெட்டுகளை அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முயல்வதால் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனை ஒரு சிலர் பயன்படுத்திக் கொண்டு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் வீணான வதந்திகளை நம்பி, பால் பாக்கெட்டுகள் கிடைக்காது என தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பாலினை செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட வழிவகுத்து, பால் அதிக விலைக்கு விற்பனை செய்ய பொதுமக்களாகிய நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!