DMK request of Namakkal district to set up a gateway across the Cauvery River in Mohanur

மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் கிழக்குமாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணைஅமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை அமைக்க வேண்டும். இதன் மூலம் சுமார் 2 டிஎம்சிதண்ணீர் தேக்கப்படுவதால் கரையின் இருபுறமும் அமைந்துள்ள கால்வாய்களில் நீர் செல்வது சீராக அமையும். மேலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

சுமார் 3 கி.மீ சுற்றுளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த கதவணையில் தண்ணீரை தேக்கி மின்சாரம் தயாரிக்கலாம். போக்குவரத்துக்காக இருகரைகளையும் இணைக்கலாம். நாமக்கல் நகராட்சி, மோகனூர், பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், பட்டணம், சீராப்பள்ளி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி, எருமப்பட்டி போன்ற கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

காவிரியின் வலதுகரையில் உள்ள டிஎன்பிஎல் அரசு காகித ஆலைக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். இதனால் குறிப்பிட்ட பகுதிவரை மணல் கடத்தலை தடுக்க முடியும். மேலும், அணையில் இருபக்கமும் பூங்கா அமைத்து சுற்றுலா மையமாக உருவாக்க முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் மின்சாரத்துறையில் நடைபெற்றுவரும் பல்வேறு ஊழல்கள் குறித்து முறையாக விசாரனை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில திமுக நிர்வாகிகள் ராணி, நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராணா ஆனந்த், நந்தகுமார், நகர பொறுப்பாளர் மணிமாறன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், ஜெகநாதன், அசோக், கவுதம், பாலு உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!