DMK is doing politics with smaller parties: L.Ganesan MP interview

கருணாநிதி இருக்கும்போது அவரது தலைமையை சுற்றி சிறிய கட்சிகள் இருந்தன, அந்த கட்சிகள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தன. ஆனால் இப்போது சிறிய கட்சிகளை வைத்து தான் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்றார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.

நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்திய பொருளாதார நிலை குறித்து உலக அளவில் ப்ல்வேறு நிலைகளிலும் பாராட்டப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோர் வேறுவிதமாக விமர்சனம் செய்கின்றனர். எது உண்மை என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். கருப்பு பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை ஓட்டிய கட்சியை சாந்தவர்களுக்கு, கருப்பு பணம் ஒழிப்பு என்பது துக்க தினம் தான். காங்கிரஸ் கட்சிக்கு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்பது பேரிழப்பு. இதனால் தான் காங்கிரஸ் கட்சி துக்க தினம் என்கிறது.

ராகுல்காந்தி மத்திய அரசு குறித்து எப்போது விமர்சனம் செய்தாலும், நிறைவாக சில தொழிலதிபர்கள் குறித்து விமர்சனம் செய்வார். தொழிலதிபர்களுக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் ஏதோ பிரச்னை என கருதுகிறேன்.

சந்திரபாபு நாயுடு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். ஆனால் மத்திய அரசை எதிர்ப்போம் என குரல் கொடுக்கும் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இது காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தின் வெளிப்பாடு.
எதிர்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுவிட்டால் தன்னை பிரதமராக தேர்வு செய்வார்கள் என சந்திரபாபு நாயுடு கனவு கனவு காண்கிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை வீழ்த்துவோம் என கூறியுள்ளார். தி்முக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை, ஆனால் இவர் மத்தியில் இமயம் போல் உறுதியாக உள்ள பாஜக அரசை வீழ்த்துவோம் என்று பேசுகிறார்.

பாசிச ஆட்சியை நடத்தியவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஸ்டாலின் என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும். பாசிச ஆட்சியை உண்மையாக வெறுப்பவராக இருந்தால், தனக்கு அந்த பெயரை வைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் அவமானப்பட வேண்டும். அவரது தந்தை தனது பெயரை மாற்றிக்கொண்டபோது போல் இவரும் தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கை தெரியும் அளவுக்கு அந்த கட்சியில் எந்த செயல்பாடும் தெரியவில்லை. மாறாக மு.க.ஸ்டாலின் பேச்சு செல்வாக்கை இழக்க வைக்கின்றன. கருணாநிதி இருக்கும்போது அவரது தலைமையை சுற்றி சிறிய கட்சிகள் இருந்தன, அந்த கட்சிகள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தன. ஆனால் இப்போது சிறிய கட்சிகளை வைத்து தான் திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு அதிமுகவில் அவருக்கு சமமான தலைவர் இல்லை. இருப்பினும் ஓராண்டுக்கு மேல் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையேயும் அக்கட்சியினர் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் திமுக வந்து விடக்கூடாது என்பதற்காக அதிமுகவுக்கு வாக்களித்தனர். இப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. இதனால் இந்த வாக்காளர்கள் பாஜகவை ஆதரிப்பார்கள்.

தமிழகத்தில் இரு தலைவர்கள் மறைவுக்கு பிறகு மக்கள் 3 ஆவது சக்தியை ஆதரிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டனர். அந்த மூன்றாவது சக்தியாக மோடி இருக்கிறார். தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கண்டிப்பாக அதிகரிக்கும்.

சர்கார் திரைப்படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு குறிப்பிட்ட ஆட்சியை, கட்சியை குற்றம்சாட்டுவதுபோல் திரைப்படம் வந்தால் சம்பந்தப்பட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கு கொதிப்பைதான் உண்டாக்கும். தணிக்கை செய்துவிட்டார்கள் என்பதாலேயே படத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்தும் நியாயமானவை என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!