DMK Demonstration, denies raising the price of sugar in Ramamathapuram

ராமநாதபுரத்தில் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்திய மக்கள்விரோத அ.தி.மு.க. அரசை கண்டித்து தடையை மீறி தி.மு.க. சார்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் ரேஷன் கடையில் சர்க்கரை முன்பு கிலோ ரு.13.50க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு ரேஷன் கடையில் விற்கப்படும் சர்க்கரை விலையை கிலோ ரு.25 என உயர்த்திவிட்டது. இதனால் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதுகுறித்து தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழக மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை ஏற்றிய அ.தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆலோசனையின்படி செயல்தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

ராமநாதபுரம் அரண்மனை ராஜா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ரேஷன் கடையில் முன்னாள் எம்.பி.பவானிராஜேந்திரன் தலைமையில் இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பா ரகு முன்னிலையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், மக்கள் விரோத செயலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நிர்வாகி முத்துராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் சுபாஷ்சந்திரபோஸ், தி.மு.க. வார்டு செயலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் அண்ணாநகர் ரேஷன் கடை முன்பாக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சுப.தங்கவேலன் பேசும்போது, கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ருபாய் நிலுவை உள்ளது. இந்நிலையில் சர்க்கரை விலையை இரு மடங்காக அ.தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மக்களின் விரோத போக்கில் நடக்கும் அ.தி.மு.க. அரசு சர்க்கரை விலையை பழையபடி மீண்டும் ரு.13.50 ஆக குறைக்க வேண்டும். விவசாயிகளுக்கு நிலுவை தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம், காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, தி.மு.க., நிர்வாகி ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி இல்லாதநிலையில் தடையை மீறி தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இ.சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!