Crores of rupees Abuse in the distribution of Aavin milk; The milk agents association request for the inquiry

“ஆவினில் மிகப்பெரிய அளவில் முறைகேடு. சகாயம் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விவரம்:

தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் “ஆவின்” பால் பண்ணையில் இருந்து “ஆருத்ரா” எனும் தனியார் பால் நிறுவனத்திற்கு எந்தவிதமான அரசாணையும் இன்றி பால் வழங்கியதில் சுமார் 2கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, ஆவின் பொது மேலாளர் திரு. பசவராஜ் அவர்களை “ஆவின் நிர்வாக இயக்குனர்” காமராஜ் சஸ்பெண்ட் செய்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

ஏனெனில்…

“ஆவின் நிறுவனத்திற்கு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலில் இருந்து தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்படுகிறதா…?

அப்படி வழங்கப்பட்டால் எந்தெந்த பால் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது…?

என்ன விலைக்கு வழங்கப்படுகிறது…? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் “தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்” பதில் கேட்டு எங்களது சங்கத்தின் சார்பில் கடிதம் எழுதியிருந்தோம்.

நாங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒவ்வொரு ஆவின் ஒன்றியத்திற்கும் ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்ததின் அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதியிட்ட கடிதத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையில் இருந்து கேரளாவில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு மருந்து தயாரிப்பதற்காக பால், வெண்ணை, நெய் அனுப்பப்படுவதாக நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலர் அவர்களும்,

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதியிட்ட கடிதத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையில் இருந்து கேரள அரசின் “மில்மா” பால் நிறுவனத்திற்கு மட்டும் நாளொன்றுக்கு 4,73,058.930கிலோ பால் வழங்குவதாகவும், வேறு “எந்த ஒரு தனியார் பால் நிறுவனங்களுக்கும் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் வழங்கப்படவில்லை” என தர்மபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலர் அவர்களும்,

கடந்த 12.02.2019ம் தேதியிட்ட கடிதத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பண்ணையில் இருந்து கேரள அரசின் மில்மா பால் நிறுவனத்திற்கு பால், வெண்ணை, நெய் அனுப்பப்படுவதாக கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது தகவல் அலுவலர் அவர்களும் பதில் அளித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் இருந்து எந்த ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து விட்டு, எந்த ஒரு அரசாணையும் இன்றி “ஆருத்ரா” எனும் தனியார் பால் நிறுவனத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் பால் வழங்கி ஆவின் பொது மேலாளரே மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அரசாணை ஏதும் இல்லாமலும், ஆவின் ஒன்றியத்தின் கணக்கிலும் காட்டாமலும் தினசரி பல ஆயிரம் லிட்டர் பாலினை தனியார் பால் நிறுவனத்திற்கு வழங்குவது தனியொரு நபரால் சாத்தியமில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் தொடங்கி மேல்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் தொடர்பில்லாமல் அவ்வளவு பெரிய முறைகேடுகள் நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வினை பார்க்கும் போது “ஒருபானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்” என்கிற பழமொழி நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி பால் பண்ணையில் நடைபெற்ற முறைகேடுகள் போன்று தமிழகத்தில் உள்ள இதர ஆவின் பால் பண்ணைகளிலும் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

அரசு துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகளுக்கு பின்னால் ஆவின் நிறுவனத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் மிகப்பெரிய சதிகார கும்பல் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுவதால் தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சகாயம் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவதோடு, அதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு பதவி நீக்கம் செய்து, அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆணையிட வேண்டும் என “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அந்நிறுவனத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டியதும், கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவற்றை களையெடுப்பதும் காலத்தின் கட்டாயமாகும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!