Cauvery – Kollidam sand robbery for breakage cause: Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பாலமும் உடைந்துள்ளது. இதனால் உடனடி ஆபத்து எதுவுமில்லை என்பது நிம்மதியளித்தாலும், தமிழகத்தின் முக்கிய கட்டமைப்புகளை பராமரிப்பதில் அரசு எந்த அளவுக்கு தோல்வியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் வரும் கூடுதல் நீரை கொள்ளிடத்தில் திருப்பி விடுவதற்காக மேலணை கட்டப்பட்டிருக்கிறது. கரிகால் சோழனால் இரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை, காவிரி தண்ணீரை பல ஆறுகளுக்கு பிரித்து அனுப்புவதைக் கண்டு வியந்த ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன், கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீரை திருப்பி விடுவதற்காக 1836-ஆம் ஆண்டில் மேலணையை கட்டினார். 182 ஆண்டுகள் பழமையான மேலணையும் கல்லணையைப் போலவே பொறியியல் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிசயம் வெள்ளத்தால் உடைந்தது என்பதை நம்ப முடியவில்லை.

மேலணை அதிக காலம் உழைத்து பழமையாகி விட்டதாலும், வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட அரிப்பு காரணமாகவும் தான் அணை உடைந்தது என்றும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத விளக்கம் ஆகும். மேலணையை பராமரிப்பதில் தமிழக அரசின் தோல்வியையும், மணல் கொள்ளை ஊழல்களையும் மறைக்கவே இத்தகைய விளக்கம் அளிக்கப்படுகிறது.

முக்கொம்பு மேலணை மிகவும் வலிமையானது என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. அதன் வாழ்நாளில் ஏராளமான வெள்ளப்பெருக்குகளை எதிர்கொண்ட மேலணை, இப்போது கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே உடைந்தது என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மேலணை போன்ற கட்டமைப்புகள் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ சேதமடைந்து உடையும் அளவுக்கு மிக மோசமான கட்டமைப்பு இல்லை. ஒருவேளை அணை பழுதடைந்திருந்தால் அதுகுறித்து பொதுப்பணித்துறையின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி எந்த பதிவும் இல்லை. இத்தகைய சூழலில் மேலணையின் மதகுகளும், பாலமும் உடைந்ததற்கு அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கண்மூடித்தனமான மணல் கொள்ளை தான் என வெளிப்படையாகவே நான் குற்றஞ்சாற்றுகிறேன்.

மேலணைக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூர் கரியமாணிக்கம் பகுதியில் பல ஆண்டுகளாகவே மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அதேபோல், மண்ணச்சநல்லூருக்கு அருகிலுள்ள திருவாசி, கிளியநல்லூர் ஆகிய இடங்களிலும் மணல் குவாரிகள் உள்ளன. இவை தவிர பல இடங்களில் சட்ட விரோத மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் 30 முதல் 40 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் தான் மதகுகளின் கீழ் அரிப்பு ஏற்பட்டு அவை உடைந்துள்ளன. இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும் என்று பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ‘‘கரம் கோர்ப்போம், காவிரி காப்போம்’’ என்ற தலைப்பில் ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட நான், முக்கொம்பு உள்பட காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளைகளை பட்டியலிட்டு, அவற்றை தடுக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதை பினாமி அரசு செய்யாததன் விளைவு தான் மேலணை பலியாகியிருக்கிறது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 8000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால் இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மேலணையின் மதகுகள் சீரமைக்கப்படுவதற்கு முன்பாக கொள்ளிடத்தில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டால் கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் பேரழிவு ஆபத்து உள்ளது.

மணல் கொள்ளை ஒருபுறமிருக்க பொதுப்பணித்துறை கட்டமைப்புகளின் பராமரிப்பு என்பது மிகவும் மோசமாக உள்ளது. பொதுப்பணித்துறை என்பது பொதுப்பணிகளை மேற்கொள்வதற்கு அல்ல; மணல் கொள்ளை அடிப்பதற்காகத் தான் என்ற நிலையை திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஏற்படுத்தி விட்டது தான் இது போன்ற சீரழிவுகளுக்கு காரணமாகும். பொதுப்பணித்துறை பராமரிப்பு மற்றும் ஊழல் காரணமாகத் தான் கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் முதல் மதகு உடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பினாமி அரசின் அலட்சியம் தொடர்ந்தால் தமிழகத்திலுள்ள மற்ற கட்டமைப்புகளும் சேதமமடைவதை தடுக்க முடியாது.

எனவே, தமிழகத்திலுள்ள அணைகள், தடுப்பணைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் அனைத்து ஆறுகளிலும் ஆற்று மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து பொதுப்பணித்துறை கட்டமைப்புகளின் வலிமையையும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மணல் கொள்ளையை ஊக்குவித்து மேலணை உடைந்ததற்கு மறைமுகக் காரணமாக இருந்த தமிழக முதலமைச்சரும், பொதுப்பணி அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும், எனதெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!