Can the globe save October 8 is the main UN report

பசுமைத் தாயக மாநிலச் செயலாளர், இர. அருள், அனுப்பி உள்ள கட்டுரை:

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, தமிழ்நாடு பெருமழை ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. முடிந்துவிட்ட தென்மேற்கு பருவமழையில் கேரளா, கர்நாடகம், இமாச்சலபிரதேசம் என பல மாநிலங்களை வெள்ளம் தாக்கியது! அது பெருமழைக்காலம் போல தோன்றினாலும், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 9.4% குறைவாக பெய்துள்ளது! வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் போதுமான மழைப்பொழிவு இல்லை!

இவ்வாறு, புவி வெப்பம் அதிகமாவதன் காரணமாக – இயற்கையின் தாக்குதல் வழக்கத்துக்கு மாறாகவும், வரலாற்றில் இல்லாத அளவாகவும் இருப்பதே – இனிவரும் உலகின் நியதியாக இருக்கும்.

உண்மையில், பூமியில் மனித வாழ்க்கையின் இருத்தலும், அழிவும் -தற்போது வெறும் 0.5 டிகிரி செல்சியஸ் வேறுபாட்டில் அல்லாடிக் கொண்டிருக்கிறது!

“புவி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா? அல்லது 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த இலக்குகள் நடைமுறையில் சாத்தியம்தானா? சாத்தியமாக்க என்ன செய்ய வேண்டும்?” – இவ்வாறான கேள்விகள் உலக நாடுகளை அச்சுறுத்துகின்றன.

தற்போது தென் கொரியாவில் நடைபெற்றுவரும் ஐநா காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) எனும் அறிவியலாளர்கள் கூட்டத்தின் முடிவாக, அக்டோபர் 8 ஆம் நாள் இது குறித்த சிறப்பு அறிக்கை (Special Report on 1.5 Degrees) வெளியிடப்படவுள்ளது.

இது உலக வரலாற்றில் மிகமுக்கிய நிகழ்வாகும். இந்த அறிக்கை உலக நாடுகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உலகின் ஒவ்வொரு நாடும் போர்க்கால அடிப்படையில் தலைகீழ் மாற்றத்தை நோக்கி செல்ல கட்டாயப்படுத்தும் எனவும் பலரும் நம்புகின்றனர்.

வழக்கம் போல, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், அவற்றால் ஆட்டிவைக்கப்படும் அமெரிக்க நாடும், இந்த அறிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது!

பின்னணி என்ன?

நிலத்தில் புதைந்திருக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை கடந்த 150 வருடங்களாக பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவின் அளவு அதிகரித்து விட்டது. இதனால், பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்து ஆகும்.

புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் – என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன!

இனி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் – மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை எதிர்க்கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக மனித இனமே முற்றிலும் அழிந்துபோகும் நிலை ஏற்படும்.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை எதிர்க்கொள்வதற்கான ஐநா அமைப்பு, ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஐநா காலநிலை மாநாடுகள் (UN Climate Change Conference) நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய மைல் கல்லாக, 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (The Paris Agreement) எட்டப்பட்டது.

அதன்படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெகு கீழாக குறைப்பது என்றும், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன (பின்னர் அமெரிக்கா மட்டும் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிவிட்டது).

பாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும். இதற்கான ஒரு வழிகாட்டி அறிக்கையை அளிக்குமாறு காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவினை பாரிஸ் காலநிலை உடன்படிக்கை கேட்டுக்கொண்டது. அந்த அறிக்கை தான் அக்டோபர் 8 ஆம் நாள் வெளியிடப்படுகிறது.

காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு என்றால் என்ன?

காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (IPCC – Intergovernmental Panel on Climate Change) என்பது, தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் அறிவியலாளர்கள் அமைப்பாகும். ஐநா அவையால் 1988 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் அரசாங்கங்கள் சார்பான அறிவியலாளர்கள் மட்டுமே இடம்பெற முடியும். இதில் தற்போது 195 அரசாங்கங்கள் பங்கேற்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசினை இந்த அமைப்பு பெற்றுள்ளது.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கை கேட்டுக்கொண்ட படி, 40 நாடுகளை சேர்ந்த 91 அறிவியல் அறிஞர்கள் நேரடியாகவும், 133 அறிவியலாளர்கள் அவர்களுக்கு உதவியாகவும் செயல்பட்டு புதிய அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமிருந்து 6000 அறிவியல் ஆய்வுகளை மதிப்பிட்டு, அதன் மூலம் புதிய அறிக்கையை தொகுக்கிறார்கள்! அக்டோபர் 8-ல் 15 பக்க சுறுக்க அறிக்கையாக (Special Report on 1.5 Degrees) இது வெளியிடப்படவுள்ளது.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை செயலாக்குவதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் கூடவுள்ள ஐநா காலநிலை மாநாட்டில் (UN Climate Change Conference 2018, Katowice, Poland) அரசுகள் கூடி உறுதியான முடிவுகளை மேற்கொள்ள இந்த சிறப்பு அறிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு அறிக்கையில் என்ன இருக்கும்?

தற்போது நாம் வாழும் பூமி இயல்பான நிலையில் இல்லை. இனி் இயல்பாக இருக்கப்போவதும் இல்லை. புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாகிவிட்டது. அதனால், இனிவரும் ஆண்டுகளில் பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் எல்லாமும் இயல்புக்கு மீறியதாகவே இருக்கும்.

அதாவது, நமது முன்னோர்கள் எந்த மாதிரியான இயற்கை தட்பவெப்ப சூழலில் வாழ்ந்தார்களோ, அதே போன்ற இதமான இயற்கை சூழல் இனி நமக்கு வாய்க்காது! ஆனாலும், இந்த மோசமான இயற்கை தாக்குதலைக் கூட தாக்குப்பிடித்து மனித குலம் தொடர்ந்து பூமியில் உயிர்வாழ முடியும். அதற்கு தற்போதையை 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பை, 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

(வளிமண்டலத்தில் இதுவரை கலந்துள்ள கரியமிலவாயு காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸ் அளவினை தானாகவே எட்டிப்பிடிக்கும்).

இன்றைய தலைமுறையினரின் ஊதாரித்தனமான வாழ்க்கை முறை இனியும் தொடருமானால் -அதாவது, இப்போது இருப்பது போலவே பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, கார்கள் பயன்பாடு இனியும் தொடருமானால் – உலகின் வெப்பநிலை உயர்வு 4 அல்லது 5 டிகிரி செல்சியஸ் அளவை கடந்து, பூமியில் மனித வாழ்க்கை முற்றிலுமாக அழியும் நிலைமை ஏற்படும்!

எனவே, 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தினால் எந்த அளவுக்கு சேதங்கள் இருக்கும். ஒருவேளை, தற்போது அரசுகள் ஒப்புக்கொண்டுள்ள அளவான 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தினால் எந்த அளவுக்கு சேதம் ஏற்படும். இவ்வாறு கட்டுப்படுத்துவதற்கும் நீடித்திருக்கும் வளர்ச்சி குறிக்கோள்களை (SDGs – Sustainable Development Goals 2030) அடைவதற்கும் என்ன தொடர்பு – இவ்வாறான கேள்விகளுக்கு பன்னாட்டு அரசுக்குழுவின் அறிக்கை பதில் சொல்லும்.

தொடரும் அமெரிக்க அடாவடி!

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை ஏற்கவும் முடியாது, செயல்படுத்தவும் முடியாது என்று கூறி, அதிலிருந்து உலகின் மிகப்பெரிய காலநிலை குற்றவாளி நாடான அமெரிக்கா வெளியேறிவிட்டது (வளிமண்டல கரியமிலவாயுவில் 22% அளவுக்கு அமெரிக்கவே காரணம்). பின்னர் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவுக்கு அளித்துவந்த நிதி உதவியையும் நிறுத்திவிட்டது.

ஆனாலும், தற்போது அக்டோபர் 1 முதல் 5 வரை தென் கொரியாவில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவின் 48 ஆவது கூட்டத்தில் (IPCC 48), காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்க கூடாது என அமெரிக்கா கோரியுள்ளது.

ஒருபக்கம், ‘புவி வெப்பம் அதிகரிப்பதே உண்மை தானா?’ என்று கேட்கும் அமெரிக்கா, மறுபக்கம், ‘தொழில்நுட்ப ரீதியிலான கண்டுபிடிப்புகள் மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை குறைக்கக் கூடாது’ என கோரி வருகிறது.

உலகை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவின் வாழ்க்கை முறையையும் வளர்ச்சியையும் தடுக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் கருத்தாகும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மோசமான செயல்பாட்டுக்கு பின்னால், அமெரிக்காவிலிருந்து இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. ஐநா அவையின் அறிக்கை வெளியாதற்கு முன்பாகவே, அதனை எதிர்க்கும் பிரச்சாரத்தை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதாக கூறி, பொருளாதார வளர்ச்சியை தடுக்கக் கூடாது என அவை பிரச்சாரம் செய்கின்றன.

பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, கார்களை உலகம் கைவிட வேண்டும் என்பது ஐநாவின் முடிவாக அமையக்கூடும் என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐநா அவையை கடுமையாக எதிர்க்கின்றன. அதையே அமெரிக்க அரசும் ஐநா கூட்டத்தில் முன்வைத்துள்ளது.

முடிவு என்ன?

2018 அக்டோபர் 8 ஆம் நாள் வெளியிடப்படவுள்ள காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவின் 15 பக்க சிறப்பு அறிக்கை, 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, 2015 பாரிஸ் மாநாட்டில் ஏற்கப்பட்ட 2 டிகிரி செல்சியஸ் இலக்கு ஆபத்தானது. எனவே, 1.5 டிகிரி செல்சியஸ் அளவினை நோக்கி உலகநாடுகள் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படலாம்!

ஆனாலும், அமெரிக்காவின் கடும் நெருக்கடியின் காரணமாக, வலிமையான வார்த்தைகளுக்கு பதிலாக, மென்மையான வார்த்தைகளால் இந்த கோரிக்கை முன் வைக்கப்படலாம்!

1.5 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பதே நாமும், நமது குழந்தைகளும், அதற்கு அடுத்துவரும் தலைமுறையினரும் உயிர்பிழைத்திருக்க வழிசெய்யும். மாறாக, 2 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பது நமது வாழ்வை மிக மோசமாக மாற்றும், நமது குழந்தைகள் காலத்தை நரகமாக்கும். அதற்கு அடுத்து வரும் தலைமுறையினரை அழிவின் விளிம்பில் தள்ளும் (2 டிகிரி செல்சியஸ் இலக்கினால் உலகம் அழியாமல் தடுக்கப்படும் வாய்ப்பு 50% அளவு மட்டுமே உண்டு – 50 : 50 chance).

1.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டுவதற்காக நாம் எவ்வளவு செலவிட நேருமோ, அதனைப் போன்று 30 மடங்கு அதிக பொருளாதார இழப்பு, 2 டிகிரி செல்சியஸ் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும்.

அதே நேரத்தில், 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கினை உண்மையாகவே அடைய வேண்டும் என்றால் – உடனடியாக உலகின் எல்லா நாடுகளும் போர்க்கால அடிப்படையில் செயலில் இறங்க வேண்டும். குறிப்பாக, பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, கார்களை உடனடியாக கைவிட வேண்டும்.

“இது முடியுமா, சாத்தியம் தானா” என்பது, “பூமியில் மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா” என்கிற கேள்விக்கான பதிலாக இருக்கும்!

– இர. அருள்,

மாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம்

arulgreen1@gmail.com


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!