Backwarders: Prime Minister Narendra Modi requests Modi to withdraw the order against social justice

File Copy


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை:

8.09.1993 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் நல அமைச்சகம், ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான தகுதியுள்ளோரை வரையறைப்படுத்தும் ஆணையில், வருமான கணக்கீட்டில் மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் சேர்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருக்கு சமூக நீதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் 26.04.2002 அன்று எழுதிய கடிதத்தில், கிரிமிலேயர் முறையை நிர்ணயிக்க மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பணியாளர் நல அமைச்சகம் 15.11.1993 அன்று வெளியிட்ட ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் பிரிவு ஜி-1இல் ஆண்டு வருமானம் பற்றிய குறிப்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து ஏனைய வருமானம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் 24.04.2000 தேதியிட்ட ஆணையில், மத்திய அரசின் பணிகளுக்காக ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கு வருமான வரம்பு கணக்கிடும்போது, மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பித்தது. மீண்டும் இதே கருத்தை வெளியிட்டு, 20.07.2011 அன்று கலைஞரின் அரசு ஆணை பிறப்பித்தது.

ஆந்திர அரசும், மேற்கு வங்க அரசும் தமிழகத்தைப் பின்பற்றி கிரிமிலேயர் தொடர்பாக மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தெளிவான ஆணைகள், விளக்கங்களின் அடிப்படையில் ஓ.பி.சி. சான்றிதழை அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், 2016, 2017 மற்றும் நடப்பு ஆண்டிலும் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் சிலருக்கு அவர்களது பெற்றோர் பொதுத்துறையில் பணியில் உள்ளார்கள் என்றும், அவர்களது ஆண்டு சம்பள வருமானம், அதிகம் உள்ளது என்றும் தெரிவித்து, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான ஒதுக்கீடு மறுக்கப்பட்டு உள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு 2018 வரை சற்றேறக்குறைய நூறு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பதவி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பதவி ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய பணியாளர் நலத்துறை மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் 06.10.2017 அன்று வெளியிட்டுள்ள ஆணையின் மூலம், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் முன்னேறியவர்கள் (கிரிமிலேயர்) என வரையறை செய்துள்ளதுதான் இந்த அநீதிக்குக் காரணம்.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பிற்படுத்தப்பட்டோர் தங்களது பிள்ளைகளுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற முடியாத நிலைமையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இந்த அநீதிக்கு எதிராக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கிட உத்தரவிட்டும், இன்றுவரை பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பதவி ஒதுக்கீடு செய்திடாமல் அநீதியை இழைத்து வருகிறது மத்திய அரசு.

சமூக நீதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகம் 06.10.2017 தேதியிட்ட ஆணையின் மூலம் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதச் சம்பளம் பெறும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கல்வி ரீதியாகவும், சமுக ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்திட அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், கிரிமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு தொடர்ந்து மத்திய அரசு அநீதி இழைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் 06.10.2017 தேதியிட்ட ஆணை எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றும் நிலையை உருவாக்கி உள்ளது.

மிக முக்கியமான இப்பிரச்சினையில் மத்திய பணியாளர் நலத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு, 06.10.2017 நாளிட்ட மத்திய பணியாளர் நல அமைச்சக ஆணையை திரும்பப் பெறவும், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை மீட்டுத் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அரசியல் சட்டத்தில் எங்கும் இடம்பெறாத பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோரைப் பிரித்திடும் கிரிமிலேயர் – பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர் – எனும் சமூக அநீதியை முற்றிலுமாக நீக்குவதே பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய சமூக நீதியை வழங்கிடும். அதற்கு உரிய வகையில் அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!