At the same time, ready to meet the parliamentary and legislative elections; MK Stalin talks in Perambalur!

பெரம்பலூர். நவ.9-

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலையில், பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னாக அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் வரவேற்றார்.

அதில் அக்கட்சியின் கொள்ளை பரப்பு செயலாளர் ஆ.ராஜா தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு, பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களின் சார்பில் நடைபெற்று இருக்கும் இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தின் நோக்கம் என்வென்றால், மத்தியிலே நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாசிச பாரதீய ஜனதா ஆட்சியையும், தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சியையும், ஒரே நேரத்தில் நாட்டைவிட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு ஜனநாயக போரை நடத்துவதற்காக இந்த பெரம்பலூரில், நாம் தொடங்கி இருக்கிற, ஒரு காலத்தில் அடர்ந்த பகுதியாக இருந்த இந்த பெரும்புலியூர் என்றழைக்கப்பட்ட இந்தப்பகுதிதான், பெரம்பலூர் என்று அழைக்கபட்டு கொண்டிருக்கிறது என்று வரலாற்று ஏட்டிலே ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பாசிச விலங்குகளையும், ஊழல் கிருமிகளையும், வேட்டையாடுவதற்கு அறைகூவல் விடுக்க ஒரு களமாக அமைத்திருக்கிறோம். அதற்கு இந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்த்தை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கழங்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தை பார்க்கும் பொது கண்டன பொதுக்கூட்டத்தை பார்க்கும் போது இதை கண்டன பொதுக்கூட்டமாக கருதவில்லை. இந்த கூட்டத்தை நான் எப்படி கருதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், இது ஏதோ மாவட்ட அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய மாவட்ட அளவில் மாநாடா என்று சந்தேகப்படக் கூடிய அளவில் இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கத்திலே மழை மிரட்டிக் கொண்டிருந்தாலும், அதைப்பற்றி பொருட்படுத்தாமல், கூட்டத்தை பார்க்கிற போது, விரைவில், நிச்சயமாக, உறுதியாக, பாசிச மத்திய ஆட்சியையும், ஊழல் மிகுந்த மாநில ஆட்சியையும் மக்கள் விரட்டியடிக்க தயராகிவிட்டார்கள். இந்த இரண்டு மாவட்டங்களுக்கு பல்வேறு நேரங்களில் வந்திருக்கின்றேன். பல்வேறு காலக்கட்டங்களில் நான் வந்து சென்றிருக்கின்றேன். அதையெல்லாம், மிஞ்சக் கூடிய அளவிற்கு, விஞ்சக் கூடிய அளவிற்கு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய இந்த கூட்டத்தில் நான் பங்கேற்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறன் என்று சொல்வதை விட என் வாழ்நாளில் மறக்க முடியாத கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது என்பதையும் புலங்காகித உணர்வோடு நான், தெரிவிக்க விரும்புகிறேன்.

திருச்சி செல்லும் போதெல்லாம், இந்த பெரம்பலூரை, தாண்டித்தான் செல்ல வேண்டும். திருச்சி எப்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக விளங்கி கொண்டிருக்கிறதோ, அந்த கோட்டையினுடைய வாசல்தான் இந்த பெரம்பலூர் என்பதை மறந்து விட முடியாது.

குறிப்பாக உங்களில் ஒருவனாக இருக்க கூடிய நான், இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னால், முதன்முதலாக இந்த மாவட்டத்திலே பங்கேற்க கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்திருக்கிறது. அதனால்தான் சொன்னேன், இது மறக்க முடியாத கூட்டம் என்று… சொன்னேன், பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் கழகத்தை வளர்ப்பதற்கு, கலைஞரின் பெருமையை சேர்த்து தருவதற்கு, அயராது பாடுபட்டு, வேர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, உழைத்திருக்க கூடிய தியாகச் சீலர்களையெல்லாம், நினைவு கூர்ந்து ஒரு கணம் எண்ணி பார்க்கிறேன்.

அவர்களுடைய நினைவுகள் எல்லாம், மனக்கண் முன்னால் வந்து போகிறது. (உதாரணத்திற்கு சிலரை மேடையில் குறிப்பிட்டு அடையாளம் காட்டினார்)

இன்றைக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது என்று சொன்னால், நான் இன்னும் வெளிப்படையாக சொல்லுகிறேன், வழக்கமாக நடைபெறுகின்ற கூட்டம் என்று யாரும் கருதிவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அகில இந்தியாவும், கவனிக்க வேண்டிய, ஏன் கவனித்து கொண்டிருக்கிற கூட்டமாக இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

நமது இந்திய தேசத்திற்கு, ஒரு புதிய பிரதமரை உருவாக்குதற்கு, நாடாளுமன்றத்திற்கு தேர்தலை நாமெல்லாம் எதிர் நோக்கி காத்திருக்கிறோம். ஒரு வேளை நாடாளமன்ற தேர்தல் மாத்திரம் வருகிறதா!, நமெல்லாம் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிற சட்டமன்ற தேர்தலும் சேர்த்து வரப்போகிறதா, ஆக எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம், என்பதை அறிவிக்கிற கூட்டம்தான் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

மத்திய, மாநில இரு ஆட்சிகளை ஒரேயடியாக நாட்டை விட்டு விரட்டக்கூடிய வல்லமை நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்திற்குதான் உண்டு என்பதை அறிவிக்க கூடிய கூட்டம் என பல கருத்துகளை பேசினார்.

இந்தக் கூட்டத்தில், திமுக முக்கிய பிரமுகர்கள், விழுப்புரம் பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி சுபா.சந்திரசேகர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், என்.ராஜேந்திரன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.எஸ். பெரியசாமி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செ.வல்லபன், மாவட்ட அவைத் தலைவர்கள் அ.நடராஜன், தங்க.துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ம.ராஜ்குமார், டீ.சி.பாஸ்கர், நூருல்ஹிதா, மாவட்ட பொருளார் ரவிச்சந்திரன், நா.தனபால், மு.கணேசன், லதாபாலு, மற்றும் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், தில்லை.காந்தி, மற்றும் பொதுக்ழு உறுப்பினர் கி.முகுந்தன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் கி.கனகராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட பெரம்பலூர், அரியலூர் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பெரும் திரளாக ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி கொண்டானை மறந்த மு.க.ஸ்டாலின்

கூட்டத்தில், பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் கட்சியை வளர்த்த தியாக சீலர்களை பற்றி வாசித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றிகொண்டானை வாசிக்க தவறிவிட்டார். பின்னர், கட்சியினர் தெரிவித்ததன் பேரில், பின்னர் வெற்றி கொண்டானை நினைவு கூறி வாசித்தார்.

விதிகளை மீறிய திமுகவினர்; கண்டுகொள்ளாத காவல்துறை:

சரக்குகளை எடுத்து செல்லும், வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரக்கூடாது என்ற விதிகளை மீறி பெரம்பலூர் – அரியலூர் இரு மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் உள்ளிட்ட தொண்டர்களை லோடு ஆட்டோக்கள், பிக்கப் வேன்களில் அழைத்து வந்திருந்தினர். அவர்களுக்கு காவல்துறை கண்டுகொள்ளவில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!