All those who fought against Sterlite can not accept what is said of terrorists: the Thirunavukkarar

நாமக்கல்: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய எல்லோரையும் தீய சக்திகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ ரஜினிகாந்த் சொன்னாலும், யார் சொன்னாலும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். முன்னாள் ராணி, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சிராணி உள்ளிட்டோர் பேசினர்.

இதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசியது:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. திமுக அமைப்பு ரீதியாக, வாங்கு வங்கி ரீதியாக முதல் இடத்தில் இருக்கிறது. தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதிய ரூ.2,000 நோட்டு வெளியிடப்பட்டதால் பெரும் பணக்காரர்கள் பணத்தை பதுக்கிவைத்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.25,000 கோடி ஊழல் நடந்துள்ளது.

மத்திய அரசு ஜாதி, மொழியால், மதத்தால் மக்களை பிரிந்தாளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை விரைவில் ரூ.100 ஆக உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வரும் போது ரூ.60 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.82ஆக உயர்ந்துள்ளது.ரூபாய் கணக்கில் உயரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்போது பைசா கணக்கில் குறைக்கப்படுகிறது.

எனவே இப்படிப்பட்ட மோசமான ஆட்சி இந்தியாவில் இருந்து தூக்கியெறிப்பட வேண்டுமானால் அகற்கான ஆற்றல் படைத்த ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான். இந்தியாவில் 3 ஆவது அணி, 4 ஆவது அணி என்பதெல்லாம் நடைமுறைக்கோ, ஆட்சிக்கோ வர முடியாது. பாஜகவை வீழ்த்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான். பிரதமராக வர யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம்.

தமிழகத்தில் முதல்வராக வேண்டும் 100 பேர் வரை ஆசைப்படுகின்றனர். ஒரு திரைப்படத்தில நடித்தாலே அடுத்து முதலமைச்சர் என்கின்றனர். அப்படி இருக்கையில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோர் ஏன் சொல்லமாட்டார்கள்.

அன்புமணி, சீமான் போன்றோரும் முதல்வர் கனவி்ல் இருக்கின்றனர். இதுபோல் நாட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பிரதமர் கனவில் இருகின்றனர். தெலுங்கான மாநிலத்தில் இருப்பதே 17 எம்பி தொகுதிகள், அதில் எத்தனை தொகுதிகளில் சந்திரசேகரராவ் கட்சி வெற்றிபெறும் என தெரியவில்லை ஆனால் அவர் பிரதமராக ஆசைப்படுகிறார். இவர் போன்று பலரும் பிரதமராக விரும்பினாலும் மோடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அமரும் தகுதிவாய்ந்த தலைவர் ராகுல்காந்தி மட்டும் தான்.

தமிழகத்தை பொறுத்தவரை இங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பது ஒரு ஊழல் ஆட்சி, பாஜகவின் பி டீம் ஆட்சி, பினாமி ஆட்சி, பயந்து நடுங்குகிற ஆட்சி, ஜெயலலிதா மோடியை எதிர்த்தார், ஆனால் இப்போது அவருடைய பெயரை சொல்லிக்கொண்டு ஆட்சி செய்பவர்கள் மோடியை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்.

இதனால் தான் உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்க முடிவதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால் 13 உயிர் பலியாகி இருக்காது. நூற்றுக்கணக்கான பேர் குண்டடிபட்டு இருக்கமாட்டார்கள். மக்கள் போராட்டங்களை அரசு அடக்குமுறைகளால் அடக்கிவிட முடியாது.

எந்த அரசாக இருந்தாலும் பணிந்துதான் ஆக வேண்டும். மக்கள் போராட்டத்தை கண்டு இந்த அரசு பணிந்துவிட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி் கட்சிகள் தொடர்ந்து நடத்திய போராட்டம் வெற்றிபெற்றிருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய எல்லோரையும் தீய சக்திகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ ரஜினிகாந்த் சொன்னாலும், யார் சொன்னாலும் ஏற்க முடியாது. மக்கள் போராட்டத்தில் ஒரு சில வன்முறையாளர்கள், ஒரு சில தீவிரவாதிகள், ஒருவேளை நுழைந்திருந்தது உண்மையென்றால் அதற்கான பொறுப்பையும் தமிழக அரசு தான் ஏற்க வேண்டும்.
காவல் துறையின் தோல்வி அது, உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இவர்களை எல்லாம் கண்டுபிடித்து முன்கூட்டியே கைது செய்திருக்க வேண்டும். அரசின் தோல்வி, காவல்துறையின் தோல்வி, உளவுத்துறையின் தோல்வி இவற்றையெல்லாம் பொதுமக்கள் மேல் சுமத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் வன்முறையாளர்கள் என்று சொல்ல முடியாது. உயிரிழந்த 13 பேரில் யாரும் தீவிரவாதி கிடையாது. குண்டடிபட்டவர்கள் யாரும் தீவிரவாதி கிடையாது, வன்முறையாளர்கள் கிடையாது. பொதுமக்கள் தான் சுடப்பட்டிருக்கிறார்கள், போராட்ட்ததை முன்னின்று நடத்தியவர்கள் தான் சுடப்பட்டிருக்கிறார்கள்.

முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ள இந்த அரசு அகற்றப்படவேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழகம் வளர்ச்சி கண்டது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. மீண்டும் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர், காமராஜர் தொண்டர் யாராவது ஒருவர் தமிழக முதல்வராக வர வேண்டும்.

அதற்காக 50 ஆண்டுகாலம் காத்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகாலம் பொறுத்திருக்க மாட்டார்களா? ஆட்சி அமைக்கும் நிலைக்கு உயரும் வகையில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போராட வேண்டும் என பேசினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!