Agricultural University Vice Chairperson Selection: Create new search panel! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்திற்கான நடைமுறைகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துணைவேந்தர் பதவிக்காக தயாரிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட உத்தேசப்பட்டியலில் தகுதியற்ற பலர் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் நோக்குடன் செய்யப்படும் இந்த முறைகேடுகள் கண்டிக்கத்தக்கவை.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் கு.இராமசாமி 15-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதைத்தொடர்ந்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள மகாத்மா புலே வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.பி. விஸ்வநாதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.இராமசாமி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் முன்னாள் உதவித் தலைமை இயக்குனர் சக்கரவர்த்தி தேவக்குமார் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர் பதவிக்கு 55 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் இருந்து முதல்கட்டமாக 10 பேரை இக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

பேராசிரியர்கள் என்.குமார், கீதாலட்சுமி, கே.சுப்பையன், இ.வடிவேலு, உதயசூரியன், பொன்னுசாமி, நடராஜன், கிருஷ்ணகுமார், கணேசமூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தான் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேர் பட்டியலில் இருப்பவர்கள் ஆவர். இவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்வதற்காக சென்னையில் நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது. 3 பேர் பட்டியல் ஆளுனரிடம் நாளையோ, அதற்கு மறுநாளோ தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவரை வரும் 15-ஆம் தேதிக்கு முன்பாக நியமிக்க தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 10 பேர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியற்றவர்களாவர்.

10 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முனைவர் இ.வடிவேலு என்பவரை துணைவேந்தராக நியமிக்கத் தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முனைவர் வடிவேலு தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் ஆதரவுடன் தான் இவர் துணைவேந்தராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம், பசுமைக்குடில் திட்டம், துல்லியப் பண்ணைத் திட்டம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்தவர். இதுதொடர்பாக இவர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவு முதற்கட்ட விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முனைவர்கள் கீதாலட்சுமி, குமார் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் மிகவும் வெளிப்படையாக நடைபெறுகிறது என்று ஆளுனரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கூறி வருகிறார். ஆனால், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 55 பேரிலிருந்து 10 பேர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. துணைவேந்தர் பதவிக்கு மிகவும் தகுதியான வணங்காமுடி, விஸ்வநாதன், மோகன், வள்ளுவப் பாரிதாசன், மகிமைராஜா, பி.ஜே.பாண்டியன், அனந்தக்குமார் உள்ளிட்ட பலரின் பெயர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன.

துணைவேந்தர் தேர்வுக்குழுவில் மொத்தம் 3 பேர் இடம்பெற்றிருந்த போதிலும் அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவரான முன்னாள் துணைவேந்தர் சி.இராமசாமி தான் மற்ற இரு உறுப்பினர்களையும் தவறாக வழிநடத்தியுள்ளார். முனைவர் சி.இராமசாமி ஏற்கனவே துணைவேந்தராக இருந்த போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலும், பாலியல் அத்துமீறல் புகார்களிலும் சிக்கியவர் என்றும், அதனால் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானவர் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவரின் வழிகாட்டுதலில் நடக்கும் தேர்வுக்குழு நியாயமானவர்களை தேர்வு செய்யும் என எதிர்பார்ப்பது தவறு.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு நான் சிறப்பு விருந்தினராகச் சென்று பேராசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அப்பல்கலைக்கழகம் அண்மைக்காலமாக சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெருமையை சீர்குலைக்கும் வகையில் புதிய துணைவேந்தர் நியமனம் அமைந்து விடக்கூடாது. எனவே, இப்போதுள்ள துணைவேந்தர் தேர்வுக்குழுவை உடனடியாகக் கலைத்து விட்டு, அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட கல்வியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட புதிய தேர்வுக்குழுவை அமைத்து வெளிப்படையான முறையில் துணைவேந்தர் தேர்வை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!