3 people arrested for attempting to murder Rowdy in Namakkal And another one surrenders the court

நாமக்கல்லில் பிரபல ரவுடி காசிராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் செய்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவர் கோர்ட்டில் சரனடைந்தார்.

நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் காசி என்கிற காசிராஜன் (29). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்த காசிராஜன், கடந்த 11-ந் தேதி இரவு நாமக்கல்-திருச்சி ரோடு எஸ்.கே.நகர் பகுதியில் மனைவி தேவியுடன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த காசிராஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காசிராஜனின் மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை முயற்சி வழக்கில் நாமக்கல் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்த மனோ என்கிற மனோகரன் (வயது 23), ஆர்.பி.புதூரை சேர்ந்த கிருஷ்ணகாந்த் (23), எம்.ஜி.ஆர் நகர் சீனிவாசன் (24) உட்பட சிலருக்கு தொடர்பு இருப்பதும், இவர்கள் 3 பேரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மனோகரனின் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மனோகரன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாமக்கல்லில் பழக்கடை நடத்தி வந்த சுப்புராஜ் கொலை வழக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீரா என்கிற வீரகுமாருக்கு (32) ஆதரவாக மேலும் சிலருடன் சேர்ந்து காசிராஜனை கொலை செய்யும் எண்ணத்துடன் அரிவாளால் வெட்டியதாக கூறினர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியாக கருதப்படும் நாமக்கல் வ.உ.சி. நகரைச் சேர்ந்த வீரகுமார் நேற்று நாமக்கல் 2-வது ஜேஎம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் ரிமாண்ட் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் தமயந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!