ceo_pbrபெரம்பலூர். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக அரசுப் பள்ளியில் நடைபெற உள்ள 43- வது ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவங்கி வைக்க உள்ளார்.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலர் த.சபிதா, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது, உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிக் கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் ஏராளமானோர் பங்கு பெற உள்ளனர்.

இக்கண்காட்சியில் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கண்காட்சியில் தனிநபர் மாணவர் படைப்பு பிரிவில் மாவட்டத்திற்கு இரண்டும், இரு நபர் இணைந்து வழங்கும் பிரிவில் ஒன்றும், அறிவியல் ஆசிரியர் பிரிவில் ஒன்றும், மற்றும் கணித கருத்தரங்கு ஒன்றும் என மாவட்டத்திற்கு 5 படைப்புகள் இடம் பெறுகின்றன. இக்கண்காட்சிக்கு என்று மொத்தம் அறிவியல் துறைக்கு என்று 128 அரங்குகளும், கணிதத்துறைக்கு என்று தனி அரங்கமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களிலும் மாணவ, மாணவிகளிடையே வினாடி வினா போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் விழா நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களிலும் மதிய வேளையில் மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் 110 க்கும் மேற்ப்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை இன்றைய இளைய சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை மூலம் இயக்கி அது சார்ந்த அறிவினை பெறுவதற்காக தனி அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் முதல் நாளன்று மாலை அமர்வில் இஸ்ரோ முதன்மை விஞ்ஞானி ச.கோமதிசாரதா மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார், இரண்டாம் நாளன்று காலை பியூட்டி ஆப் தி ஸ்கை எனும் தலைப்பில் முனைவர்.பி.எஸ்.ஜோசப், மாலை மந்திரமா தந்திரமா எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஜெ.மனோகர், மூன்றாம் காலை அறிவோம் அறிவியல் எனும் தலைப்பில் பேராசிரியர் ஜி.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். மேலும் வெளிமாவட்டங்களிலிருந்து இக்கண்காட்சிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இக்கண்காட்சியை சிறப்பாக நடத்திட ஏதுவாக 24 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் பணிகள் ஒதுக்கப்பட்டு அதனடிப்படையில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன, என இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம் குமார், மணிவண்ணன், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் கோபால், நிகழ்ச்சி தொகுப்பாளர் இராச.பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!