IMG-20150618-WA0000IMG-20150617-WA0056
படவிளக்கம்: சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உதவி ஆணையாளர் கணேசன் அதிமுக கரை வேட்டியில் வாக்கு சேகரிக்கும் புகைப்படம்.

சென்னை : இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து நடத்தை விதிகளும் காற்றில் பறக்கவிடப் படுகின்றன.

பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்ற அளவுக்கு விதிமுறைகள் மீறப்படுகின்றன.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதால் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டன.

கழிவு நீர் குழாய்களும், குடிநீர் குழாய்களும் இரவோடு இரவாக மாற்றப்பட்டு புதிய குழாய்கள் புதைக்கப்பட்டன. சாலை அமைக்கும் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், அப்பணியை சென்னை மாநகர காவல்துறை ஆணையரே நேரில் மேற்பார்வையிட்ட அவலமும் நடந்தது.

பொதுமக்களின் நலனுக்காக இந்த பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், 4 ஆண்டுகளாக எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு அனைத்துப் பணிகளையும் இரவோடு இரவாக செய்து முடிப்பது ஏன்? என்பது தான் மக்கள் எழுப்பும் கேள்வி ஆகும்.

கடந்த 4 ஆண்டுகளாக அரசு செயல்படவில்லை என்பதற்கு ஆட்சியாளர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலமாகவே இதை பொதுமக்கள் பார்க்கிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்க இதுவரை வராத நிலையில், அவருக்காக 28 அமைச்சர்களும், 48 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 150 சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பணியை மறந்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வினர் என்ற முறையில் இவர்கள் கட்சிப்பணியாற்றுவதை விமர்சிக்க முடியாது. ஆனால், அரசிடம் ஊதியம் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் பலரும் அ.தி.மு.க. கரை வேட்டி ஜெயலலிதாவுக்காக பரப்புரை செய்கின்றனர்.

சேலம் மாநகரக் காவல்துறையின் மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி கடந்த 10 நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ள உதவி ஆணையாளர் கணேசன், தற்போது இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினருடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அரசு ஊழியரான இவர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி, ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க. நிர்வாகியாகவே மாறி பரப்புரை செய்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி இது தவறு ஆகும். அதுமட்டுமின்றி 1973 ஆம் ஆண்டின் தமிழ்நாடு காவல்துறை சார்பு அதிகாரிகள் விதி எண் 18, 1973 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி எண் 14 ஆகியவற்றின்படி காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் அரசியல் பணியில் ஈடுபடுவது குற்றம் ஆகும்.

இவற்றின் அடிப்படையில், அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பணியாற்றி வரும் காவல்துறை உதவியாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதுடன், துறை ரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தன்னை அ.தி.மு.க. நிர்வாகியாக வெளிக்காட்டிக் கொள்ளும் கணேசன் கடந்த காலங்களில் நடுநிலையான அதிகாரியாக பணியாற்றியிருக்க வாய்ப்பில்லை; இனி வரும் காலங்களிலும் அவ்வாறு செயல்பட வாய்ப்பில்லை. எனவே, கடந்த காலங்களில் இவரது செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது போன்ற கருங்காலிகள் தான் உண்மையாக உழைக்கும் காவல்துறையை கலங்கப்படுத்துகின்றனர்.
கட்சிக்கும் காசுக்கும் மாரடிக்கும் இது போன்ற அதிகாரியை நேர்மையான நிர்வாகம் அளிக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!!

களை எடுப்பதை தவிர வேறு வழியில்லை!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!